Trichy Panjapur Vegetable Market: பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைக்கப்படும் காய்கறி சந்தையில், மொத்தம் ஆயிரத்து 871 கடைகள் இடம்பெற உள்ளன.

பஞ்சப்பூர் காய்கறி சந்தை:

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றாக பஞ்சப்பூரில், பிரமாண்டமாக இரண்டடுக்கு பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஏசி, லிஃப்ட், கழிப்பறைகள், பார்க்கிங் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து, அனைத்து பகுதிகளுக்குமான பொது போக்குவரத்து இணைப்பு மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரம், பஞ்சப்பூர் பகுதியில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக, புதிய பிரமாண்ட காய்கறி சந்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை:

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே பசுமைப் பூங்கா பகுதியில், 22 ஏக்கர் பரப்பளவில் 236 கோடி ரூபாய் செலவில் அமையும் சந்தைக்கு, பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமையும் புதிய ட்ரக் முனையத்திற்கு நேர் எதிரே இந்த காய்கறி சந்தை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ள இந்த சந்தையில் ஆயிரத்து 871 கடைகள், 186 கழிவறைகள், 1,402 வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 4 வழிப்பாதையான சென்னை - திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, மற்றொரு நான்கு வழிப்பாதையான க்ராஃபோர்ட் - இ புதூர் மெயின் ரோரை இணைக்கும் பழைய மதுரை சாலை வழியாகவும் பொதுமக்கள் இந்த சந்தையை அணுக முடியும்.

TN CM Mk Stalin today laid the foundation stone for an Integrated Vegetable Market at Panjapur, Trichy to be built at a cost of 236 Crs over 22 acres of land. The facility will have 1871 shops, 186 resting lounges, parking facility for 1402 vehicles. A whole new city in making!! pic.twitter.com/FhiQazqJvi

— Chennai Updates (@UpdatesChennai) May 9, 2025

இணைப்புத் திட்டங்கள்:

காய்கறி சந்தையின் 500 மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் தான், புதிய பேருந்து முனையம் மற்றும் ட்ரக் முனையம் அமைந்துள்ளன. இதனால் அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலை பயணிகளுக்கு ஏதுவாக ஒரு மேம்பாலத்தை அமைக்க, திருச்சி மாநகராட்சி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி பாலத்துடன் பேருந்து முனையத்தின் சுற்றுப்புறத்தை இணைக்கும் கோரையாறு ஆறு மற்றும் குடமுருட்டி ஆற்றின் கரைகளில் இணைப்புச் சாலையை உருவாக்க பசுமை பூங்காவில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது திருச்சி நகரத்தின் பல பகுதிகளில் பயணிப்பதால், பொதுமக்களுக்கான அணுகல் எளிதாகும் என கூறப்படுகிறது. முன்னதாக கோயம்பேட்டில் தான் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே, பிரமாண்ட காய்கறி சந்தை இருந்தது. தற்போது அதே பாணியில் பஞ்சப்பூர் பகுதி உருவாக்கப்படுகிறது. திட்டத்திற்கான நிதியில் தமிழ்நாடு அரசு 136 கோடியும், மாநகராட்சி நிர்வாகம் 100 கோடி ரூபாயும் பங்களிக்கிறது.

பஞ்சப்பூரில் விரிவடையும் வர்த்தகம்:

திருச்சியில் ஏற்கனவே இருக்கும் காந்தி சந்தை உள்ளிட்ட பிற காய்கறி சந்தைகளுக்கான மாற்றாக, பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை உருவாக்கப்படவில்லை என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகரின் வளர்ச்சிக்கான புதிய வசதியாக இது இருக்கும் என விளக்கமளித்துள்ளது. அதேநேரம், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கிழக்கு பவுல்வர்டு சாலையில் அமைந்துள்ள வாழைப்பழ ஏல மையம் பஞ்சாப்பூர் சந்தைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பஞ்சப்பூர் பகுதி வர்த்தக மையமாக உருவெடுக்க தொடங்கியுள்ளது. பேருந்து நிலையம், ட்ரக் முனையம் மற்றும் காய்கறி சந்தை மட்டுமின்றி, இதேபகுதியில் தான் ஆம்னி பேருந்துகளுக்கு என தனி பேருந்து நிலையம், டைடல் பார்க் ஆகியவையும் அமைகின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து உணவகம், ஓட்டல்கள், சிறுகடைகள் போன்றவை அந்த பகுதியில் அடுத்தடுத்து அமையலாம். போக்குவரத்து இணைப்பும் எளிதில் இருப்பதால், திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கூட, ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்ல விரும்புவர். இதனால், அந்த பகுதியில் வர்த்தகம் கணிசமாக மேபடும் என நம்பப்படுகிறது.

ரியல் எஸ்டேட் தாக்கம்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. கிளாம்பாக்கத்தை போன்றே இந்த பேருந்து நிலையமும் நகரில் இருந்து சற்று தொலைவாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பேருந்து மற்றும் ட்ரக் முனையம்,காய்கறி சந்தை, டைடல் பார்க் ஆகியவற்றால், வர்த்தக பகுதியாக உருவெடுத்து விரைவிலேயே பஞ்சப்பூர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகவும் உருவெடுக்கலாம் என நம்பப்படுகிறது. வாடகை வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கலாம். இதனால், திருச்சி - பஞ்சப்பூருக்கு இடைபட்ட 7 கிலோ மீட்டர் என்பதும் வருங்காலங்களில் நகர்மயமாகலாம். இது ரியல் எஸ்டேட் பிரிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நிலங்களின் மதிப்பை பல மடங்கு உயர்த்தக்கூடும்.

நிலங்களின் விலை நிலவரம்:

திருச்சி, பஞ்சப்பூரில் நில விலைகள் பொதுவாக சதுர அடிக்கு 850 முதல் 2000 ரூபாய் வரை நீள்கிறது. குறிப்பிட்ட சொத்துக்களின் விலை அளவு, இருப்பிடம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. அதேநேரம், மணிகண்டம் போன்ற பஞ்சப்பூருக்குள் உள்ள சில பகுதிகளில் விலைகள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒரு ஏக்கர் விலை ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை அடையும் வாய்ப்பு உள்ளது.