நெருங்கும் தேர்தல்- வேட்பாளர் யார்.?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. இதில் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பணிகள் விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் தேர்வையும் ரகசியமாக அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம். யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.? என ரகசிய சர்வேக்களையும் அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. அதிலும் தற்போது சிட்டிங் எம்எல்ஏவிற்கு மக்கள் மத்தியில் மதிப்பு உள்ளதா.? மீண்டும் அவரையே நிறுத்தலாமா.? அல்லது புதிய நபர்களை களம் இறக்கலாமா என ஆலோசித்து வருகிறது.

திமுகவின் கோட்டை பாளையங்கோட்டை

அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கடந்த தற்போதைய எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காது என தகவல் வெளியாகி வருகிறது. எனவே புதிய முகங்களை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவின் கோட்டையாக இருப்பது தென் மாவட்டம் தான், அதிலும் பாளையங்கோடை தொகுதி முக்கிய தொகுதியாகவே உள்ளது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என பாளையங்கோட்டை அழைக்கப்படுகிறது.கடந்த 9 சட்டமன்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இதற்கு முன்னதாக டி.பி.எம். மைதீன்கான் பெற்று அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்துல் வஹாப் போட்டியிட்டு பாளையங்கோட்டை தொகுதியை கைப்பற்றினார்.

பாளையங்கோட்டையை குறிவைக்கும் இஸ்லாமிய கட்சிகள்

பாளையங்கோட்டை தொகுதியில் முக்கிய இடமான மேலப்பாளையம் பகுதியில் 95 சதவிகிதத்துக்கு மேல் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இது போல் நகர்ப்புற பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் உள்ளனர்.இந்த நிலையில் பாளையங்கோட்டை தொகுதியில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.? யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாக இருப்பதால் திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகளும் பாளையங்கோட்டை தொகுதியை குறிவைத்துள்ளது. முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் போட்டி போட்டு வருகிறது. இதில் குறிப்பாக நெல்லை முபாரக்கும் பாளையங்கோட்டைய கேட்டு வருகிறார். அதே நேரம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பாளையங்கோட்டை இருப்பதால் திமுகவே தக்கவைத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

எனவே தற்போதைய எம்எல்ஏவாக உள்ள அப்துல் வஹாப் இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். ஆனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களை அப்துல் வஹாப் உரிய வகையில் செயல்படுத்தவில்லையென கூறப்படுகிறது. மேலும் கட்சியில் தொடரும் உட்கட்சி மோதலால் வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாக ஏர்வாடி சித்திக் தற்போது திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆரம்பத்தில் ஆவுடையப்பன் மற்றும் அப்பாவு அணியில் இருந்தவர் தற்போது கிராகம்பெல் அணியில் உள்ளார். இவரது பெயரும் அடிபட்டு வருகிறது.

திமுகவில் யாருக்கு வாய்ப்பு.?

அடுத்தாக துபாய் மீரான், துபாயில் திமுகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் பணிகளில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அரியசநல்லூர் சொந்த ஊராகும். மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வந்தவர் ஜெயலலிதா ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், துபாய் சென்றவர் அங்கு பணியாற்றி வருகிறார். அமீரக திமுக செயலாளராகவும், தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார். எனவே பாளையங்கோட்டை தொகுதியை குறிவைத்து தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினின் குட் புக்கில் துபாய் மீரான் பெயர் உள்ளதால் திமுக தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.