பத்மஸ்ரீ விருது பெற்ற இரும்பு பெண்மணி பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இரங்கல்...

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார். இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும். பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். இவருக்கு வயது 109. கோயம்புத்தூர் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. கடந்த 17ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு தந்தை பெரியார் விருது வழங்கி கௌரவித்தது.

யார் இந்த பாப்பம்மாள்?

தேனாவரத்தில் பிறந்தவர் பாப்பம்மாள். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்திற்கு மூன்று வயதில் இடம்பெயர்ந்தார். தனது இறுதி மூச்சு வரை அங்கு தான் வசித்து வந்தார்.

பாப்பம்மாள், இளம் வயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்தார். பின்னர், இவருக்கும் இவரது அக்காவுக்கும் அவரது பாட்டி தான் அடைக்கலம் கொடுத்துள்ளார். முதன் முதலில் மளிகை கடையில் வேலை செய்துள்ளார். இவரது அம்மா, அப்பா வழியில் இவரும் மளிகை கடை வைத்து தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தனது சமூகப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்றுவரும் அனைத்து தேர்தல்களிலும் இவர் தவறாமல் வாக்களித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட வாக்களித்தார்.