ஆப்ரேஷன் சிந்தூர் காரணாமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது, இதன் காரணமாக இரு நாடுகளிலும் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல்(இந்தியா), பிஎஸ் எல்(பாகிஸ்தான்) ஆகிய தொடர்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிஎஸ்எல்:

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிய பல வெளிநாட்டு வீரர்கள் போர் பதற்றம் காரணமாக தங்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் பயந்தனர். இது தொடர்பாக, பிஎஸ்எல்-ல் லாகூர் அணிக்காக விளையாடிய வங்காளதேச லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன் திடுக்கிடும் உண்மையை போட்டுடைத்தார்.

மே 10 அன்று, பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாடும் அனைத்து வீரர்களும் துபாயை அடைந்தனர், அங்கு மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகள் நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. துபாயை அடைந்த பிறகு, அனைத்து வீரர்களும் மிகவும் பயந்துவிட்டதாக ரிஷாத் ஹொசைன் தெரிவித்தார். குறிப்பாக வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அச்சத்தில் இருந்தனர். எல்லோரும் பாகிஸ்தானை விட்டு விரைவில் வெளியேற விரும்பினர். டாம் கரண் மிகவும் பயந்து ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்துவிட்டதாக ரிஷாத் ஹுசைன் கூறினார்.

ரிஷாத் ஹுசைன் என்ன சொன்னார்?

"சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குசல் பெரேரா, டேவிட் வீஸ், டாம் கரன் போன்ற அணியில் உள்ள மற்ற வெளிநாட்டு வீரர்கள் மிகவும் பயந்தனர். துபாயில் தரையிறங்கிய பிறகு, டேரில் மிட்செல் இப்போது நான் ஒருபோதும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார். குறிப்பாக இது போன்ற சூழ்நிலையில். ஒட்டுமொத்தமாக அனைவரும் பயந்தனர். டாம் கரண் விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். இதற்குப் பிறகு அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அவரைக் கையாள இரண்டு-மூன்று பேர் தேவைப்பட்டனர்" என்று ரிஷாத் உசேன் கூறினார்.

மீதமுள்ள 8 போட்டிகள் எங்கே?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வளர்ந்து வந்த மோதல்களுக்கு மத்தியில், மீதமுள்ள எட்டு போட்டிகள் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதற்கு அனுமதி அளிக்காமல் இருந்தது.

"அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்" என்ற கருத்தை பிசிபி எப்போதும் கொண்டுள்ளது என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி கூறினார். ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் குறிவைக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற பிசிபி முடிவு செய்துள்ளதாக அவர் முன்பு கூறினார். இதனால் மீதமுள்ள போட்டிகளை ராவல்பிண்டி, லாகூர் ஆகிய மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.