ஒடிசாவில் வங்கியில் பணம் எடுக்க சகோதரியை அழைத்து வர சொன்ன வங்கிக்கு எலும்புகூட்டை எடுத்துச் சென்று பழங்குடியின நபர் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள டயானாலி என்ற பழங்குடியின கிராமத்தில் ஜீது முண்டா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கியோஞ்சர் மாவட்டத்தின் பதானா வட்டாரத்தில் அமைந்துள்ள ஒடிசா கிராம வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு தனது இறந்த சகோதரியின் பெயரில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மூத்த சகோதரி கல்ரா முண்டா உயிரிழந்தார். அவரின் இறக்கும் தருவாயில் தான் கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் ரூ.20 ஆயிரம் பணம் இருப்பது ஜீது முண்டாவுக்கு தெரிய வந்தது. தனது அக்கா கால்நடைகளை விற்றதன் மூலம் அந்த பணத்தை சேமித்து வைத்திருந்ததையும் ஜீது கண்டறிந்தார்.

அக்காவுக்கு சட்டப்பூர்வமாக வாரிசு இல்லாமல் இருந்ததால் அவர் வங்கி கிளையை அணுகி பணத்தை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு வங்கி அதிகாரிகள் இறந்தவர்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பிற தேவையான ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் ஜீது முண்டாவால் அத்தகைய ஆவணங்களை பெற முடியாமல் போனது. இந்த நிலையில் திங்கட்கிழமையான நேற்று வங்கிக்கு வந்த ஜீது முண்டா உடன் தன் அக்கா கல்ரா முண்டாவின் எலும்புக்கூட்டின் எச்சங்களை எடுத்து வந்துள்ளார். இதனைக் கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து பட்டானா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண் பிரசாத் சாஹு தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் ஜீது நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதாவது தான் பலமுறை வங்கிக்கு சென்று பணத்தை கேட்டதாகவும், வங்கி கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வருமாறும் கூறினார்கள். நான் என் அக்கா இறந்து விட்டார் என சொல்லியும், அதை காது கொடுத்து கூட அங்கிருக்கும் அதிகாரிகள் கேட்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நான் அவர் புதைக்கப்பட்ட குழியைத் தோண்டி எலும்புக்கூட்டை வெளியே எடுத்து வந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண் பிரசாத், “ஜீது ஒரு படிப்பறிவில்லாத பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். சட்டப்பூர்வ வாரிசு அல்லது நியமனதாரர் பற்றிய விவரம் அவருக்கு தெரியவில்லை. இறந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையை அவருக்குப் புரியவைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்’ என கூறியுள்ளார். இறுதியாக ஜீது முண்டாவுக்கு உதவுவதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம். விரைவில் அவருக்கு பணம் கிடைக்கும் என தெரிவித்தார்.