டென்னிஸ் உலகின் மிகவும் புகழ்பெற்ற வீரர் ஜோகோவிச். உலகிலேயே அதிக கிராண்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை கொண்டவர். 11வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்ற தற்போது ஆடி வருகிறார்.

7 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு முடிவு எடுத்த ஜோகோவிச்:

மெல்போர்னில் நடந்து வரும் இந்த தொடரில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச் இதுவரை வாங்கிய 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10 பட்டங்கள் ஆஸ்திரேலிய ஓபன் ஆகும். இந்த பட்டத்தையும் அவர் வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் 2018ம் ஆண்டே டென்னிஸில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, ஜோகோவிச் மனைவி ஜெலீனா கூறியதாவது, "2018ம் ஆண்டு மியாமி ஓபன் தொடரில் ஜோகோவிச் பெனோய்ட் பெய்ரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிறகு எங்கள் அனைவரையும் அழைத்து உங்களுக்கு தெரியும் இது முடிந்துவிட்டது என்றார்.

நடந்தது இதுதான்:

அப்போது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இப்போது விட முடியாது. இது சரியான நேரம் இல்லை என்று கூறி நாங்கள் அழுதோம். அது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. நாங்கள் ஒன்றாக விடுமுறைக்குச் சென்றோம். அந்த விடுமுறையில் அவர் டென்னிஸ் விளையாட விரும்பவில்லை. டென்னிஸ் தொடர்பான எதையும் அவர் செய்ய விரும்பவில்லை. ஆனால், எனக்கு டென்னிஸ் பிடிக்கும்.

விடுமுறையின் 3வது அல்லது 4வது நாள் நான், எங்களது மகன் ஸ்டெபன் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். அதிர்ஷ்டவசமாக, அவர் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக நாங்கள் ஆடினோம் என்று பார்த்தார். எனக்கு டென்னிஸ் பேட் கிடைக்குமா? என்றார். சில பந்துகளை எடுத்து செர்வீஸ் செய்தார். ஒன்றும் மோசமாக இல்லை. இது ஓகே என்றார். பின்னர், நான் மரியனை அழைக்கிறேன். எனக்கு மீண்டும் பயிற்சி அளிக்குமாறு கேட்கப்போகிறேன் என்றார்" இவ்வாறு ஜோகோவிச் மனைவி தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் உலகின் ஆளுமை:

இந்த நூற்றாண்டில் டென்னிஸ் உலகின் ஆளுமைகளாக தற்போது வரை திகழும் ரோஜர் பெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய 3 பேரில் தற்போது டென்னிஸ் விளையாடும் ஒரே வீரர் ஜோகோவிச் மட்டுமே ஆவார். கடந்தாண்டு நடந்த ஒலிம்பிக்கில் ஜோகோவிச் தங்கம் வென்றார். தற்போது புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற முடிவு செய்த ஜோகோவிச் இந்த 8 ஆண்டுகளில் ஏராளமான பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.