திமுக அரசு பூஜ்ஜியம் அரசு என்று என்டிஏ கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து பேசினார்.

திமுக ஆட்சி என்றாலே பூஜ்ஜியம் ஆட்சி

அன்புமணி அவர் பேசுகையில், “திமுக ஆட்சி என்றாலே அது கஞ்சா ஆட்சி, கொலை, கொள்ளை ஆட்சி, மொத்தத்தில் பூஜ்ஜியம் ஆட்சி. திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று தொடக்கம்; ஜீரோ கவர்மெண்ட்; ஜீரோ கவர்னஸ். தகுதியில்லாத நேர்மையில்லாத திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

திமுக பாஸ் ஆகவில்லை

திமுக வெறும் 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுக ஒரு தேர்வில் பாஸ் ஆக வேண்டுமென்றால் 35 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். ஆனால் திமுக எடுத்தது வெறும் 13 சதவீதம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம், கல்வி கடன் ரத்து செய்வோம், நகை கடன் ரத்து செய்வோம், விவசாய கடன் ரத்து செய்வோம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தெரிவித்தீர்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் தொழில் 12 லட்சம் 16 ஆயிரம் கோடி வந்துவிட்டதாக மிகப்பெரிய பொய் சொல்லி இருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே உங்களுடைய நாட்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும்தான் இருக்கிறது. தமிழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வந்திருப்பது 8. 8 சதவீத முதலீடுகள் மட்டுமே வந்துள்ளது.

பெண்கள் திமுகவை மன்னிக்காதீர்கள்

தமிழகத்தில் 43 ஆயிரம் கிராமங்கள் இருக்கிறது. 43 ஆயிரம் கிராமங்களிலும் கஞ்சா மட்டும் இல்லாமல் பல்வேறு விதமான போதைப் பொருட்கள் கிடைக்கிறது. இளைஞர்களை ஆசைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் திமுகவை மன்னிக்காதீர்கள். உங்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரைப் பிள்ளைகளை அழித்து ஒழித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை அகற்றுங்கள் அகற்றுங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பேசினார்.