நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்கீழ் இதுவரை 380 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் ரூ.1.71 கோடியில் கணினி ஆய்வகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின்கீழ் இதுவரை 380 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஒளிவு மறைவின்றி பணத்தை செலவு செய்வார்கள்

முன்னாள் மாணவர்களும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்தப் பணத்தை வழங்கி உள்ளனர். இவர்களை நம்பி பணத்தை அளித்தால், ஒளிவு மறைவின்றி பணத்தை செலவு செய்வார்கள் என்று வழங்கி உள்ளனர். இந்தப் பணத்தைக் கொண்டு, பள்ளி வளர்ச்சிக்கு செலவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அது என்ன நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்?

அரசுப் பள்ளிகளுக்கு உதவ பொதுமக்களும் அரசும் இணையும் ’நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். கற்றுக் கொடுத்த பள்ளியை வளர்த்தெடுக்க இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

நோக்கம் என்ன?

முன்னாள் மாணவர்கள், உள்ளூர்ச் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது நம்ம ஸ்கூல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என இருதரப்பின் பங்கேற்பையும் பங்களிப்புகளையும் பெற்று அவற்றை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்குவதற்கான இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

அதேபோல, முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்புகொள்ளவும் இந்தத் திட்டம் உதவும்.

எப்படி உதவலாம்?

நிதியாகவோ எழுது, கல்வி பொருட்களாகவோ பங்களிப்பை வழங்கலாம். தேவை உள்ள பள்ளிகளுக்கோ, நீங்கள் படித்த பள்ளிக்கோ உதவலாம். வசதியும் மனமும் இருந்தால், பள்ளியையே முற்றிலுமாகத் தத்தெடுக்கலாம். தன்னார்வலராகவும் உங்களின் பங்கை ஆற்றலாம்.

நம்ம ஸ்கூல் இணையதளம்: https://nammaschool.tnschools.gov.in/

இந்த இணையதளத்திலேயே இந்த மாவட்ட அரசுப் பள்ளிக்கு இன்ன உதவி தேவை என்ற வாக்கியங்கள் ஸ்க்ரால் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தும் நன்கொடையாளர்கள் தேவையான பள்ளியைத் தேர்ந்தெடுத்து உதவலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

தொலைபேசி எண்கள் - 9144 28278068 / +9144 28241504
மின்னஞ்சல்: nammaschoolcsr@gmail.com