Nallakannu: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான நல்லகண்ணு இன்று தனது 101வது வயதில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லகண்ணு போராளியாக மாறியது எப்படி?

நல்லகண்ணு கடந்த சில ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார். ஆனால், தனது இளமைக்காலத்தில் தற்போதைய அரசியல்வாதி யாரும் அனுபவிக்காத இன்னல்களையும், துயரங்களையும் நாட்டிற்காக அனுபவித்தவர்.

இன்று கம்யூனிஸ்ட் கொள்கையின் அடையாளமாக திகழும் நல்லகண்ணுவிற்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் எப்படி அவரது வாழ்க்கையின் உள்ளே வந்தது? என்பதை கீழே காணலாம்.

ராமசாமி - கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்த நல்லகண்ணு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இவர் அங்குள்ள கார்னேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவராக சேர்ந்தார். இவர் படித்தபோது அங்கு ஆசிரியராக பணியாற்றியவர் பலவேசம்.

இவர்தான் நல்லகண்ணுவிற்குள் அப்போதைய நாட்டின் சூழலையும், மக்களின் கஷ்டங்களையும் விரிவாக பாடமாக எடுத்துள்ளார். அன்று பலவேஷம் ஒரு சகாப்தத்தையே பட்டைத் தீட்டுகிறோம் என்று கருதியிருக்க மாட்டார். நல்லகண்ணுவிற்கு பாரதியார், திரு.வி.க. விவேகானந்தர் ஆகியோரின் புத்தகங்களை படிப்பதற்காக வழங்கியுள்ளார்.

பட்டைத் தீட்டிய புத்தகங்கள்:

இந்த புத்தங்கள் அனைத்தும் நல்லகண்ணுவை பட்டைத் தீட்டியுள்ளது. பாரதியாரின் பாடல்களில் புதைந்து கிடந்த கருத்துக்களும், திரு.வி.க. எழுத்துக்களின் வீரியமும் நல்லகண்ணுவை ஒரு சுதந்திர போராளியாக, சமூக போராளியாக மாற்றியுள்ளது.

அவர்களின் நூல்களால் உத்வேகம் பெற்ற நல்லகண்ணு சாதிக் கட்டமைப்பை உடைப்பதும், சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுமே தன் லட்சியம் என நல்லகண்ணு சூளுரைத்தார். தொடக்க காலத்தில் காந்தியவாதியாக வாழ்ந்த நல்லகண்ணு, பின்னர் கம்யூனிச சித்தாந்தாத்தால் ஈர்க்கப்பட்டார்.

சுதந்திர போராட்டம்:

கம்யூனிச கொள்கைகளால் கவரப்பட்ட நல்லகண்ணு தன் 16 வயதிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றார். ஆனால், அவருக்கு 18 வயது பூர்த்தியாத காரணத்தால் அவரை கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டனர். தனது சிறு வயதிலே மாணவர்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராடினார்.

நெல்லை மண்ணில் நடந்த ஏராளமான சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தில் பங்கேற்றார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை சென்றார்.

கம்யூனிசத்தின் அடையாளம்:

பலரின் நூல்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிச சித்தாந்தவாதியாக வாழ்ந்து மறைந்துள்ள நல்லகண்ணு, தனது வாழ்நாளின் 80 ஆண்டுகள் கம்யூனிசத்திற்காக வாழ்ந்துள்ளார். இறுதிவரை எளிய வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த நல்லகண்ணு, தனது இறப்பிற்கு பிறகும் தனது உடலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் தானமாக வழங்கியுள்ளார். ஆயுதப்போராட்டம், தலைமைறவு வாழ்க்கை, அரசியல் பயணம் என தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த நல்லகண்ணுவையும், கம்யூனிசத்தையும் பிரித்துப் பார்ப்பது என்பது இயலவே இயலாத காரியம் ஆகும்.