Mumbai Attack: மும்பை தீவிரவாத தாக்குதலின் போது 20 நிறைமாத கர்ப்பிணிகளை காப்பாற்றிய செவிலியர், ஒரு பெண்ணுக்கு பிரசவமும் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா:

இந்தியர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத கோர சம்பவம் தான் மும்பை தாக்குதல். அதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, தஹாவூர் ராணா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். தொடர்ந்து அவர் விசாரணைக் காவலிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது பலருக்கும் ஆழ் மனதில் புதைந்து போன பல மோசமான நினைவுகளை மீண்டும் நியாபகப்படுத்தியுள்ளது. பலருக்கு இது ஒரு தீவிரவதாக தாக்குதலாக நினைவில் இருக்கலாம். ஆனால், சிலருக்கு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவதற்காகவும் ஒவ்வொரு நொடியும் போராடிய தருணங்களை நினைவுபடுத்தியுள்ளது.

அப்படி மும்பை தாக்குதலின் போது நிஜ வாழ்வின் நாயகியாக உருவெடுத்தவர் தான் செவிலியர் அஞ்சலி குல்தே. அவர் மும்பையின் காமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நிறைமாத பெண்களைக் காப்பாற்றியதோடு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவருக்கு பாதுகாப்பான பிரசவத்தையும் உறுதி செய்தார். அவருக்கு இன்றளவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடந்தது என்ன?

சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அஞ்சலி, “நவம்பர் 26 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், சத்ரபதி சிவாஜி நிலையத்தைத் தாக்கும் பயங்கரவாதிகள் காமா மருத்துவமனையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல் கிடைத்தது. சில நிமிடங்கள் கழித்து, மருத்துவமனையின் பின்புறம் உள்ள ஒரு பாதையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடைபெறும் சத்தம் கேட்டது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, இரண்டு தீவிரவாதிகள் ஓடுவதையும், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதையும் காண்டேன். அதிலிருந்து தப்பித்த தீவிரவாதிகள் தாழ்வான வாயிலைத் தாண்டி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தனர். இரண்டு பாதுகாவலர்களை அவர்கள் சுட்டுக் கொன்றதை நான் கண்டேன். ஜன்னலில் வழியாக எங்களைக் கண்டதும், அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எங்கள் ஊழியர்களில் ஒருவர் காயமடைந்தார். நான் அவரை விபத்துக்குள்ளான இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்ததாக அனைவருக்கும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டார்.

”20 நிறைமாத கர்ப்பிணிகள்”

தீவிரவாதிகள் தங்களை நோக்கி வருவதை உணர்ந்த அஞ்சலி, “வார்டின் பிரதான கதவுகளை மூடிவிட்டு 20 நிறைமாத கர்ப்பிணிகளையும் 10x10 அளவுள்ள ஒரு உணவு அறைக்கு அழைத்துச் சென்றேன். கைவசம் இருந்த செல்போன்கள் மற்றும் விளக்குகள் அணைத்துவிட்டு, இருட்டில் அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்திலேயே, உயர் ரத்த அழுத்த கொண்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி தொடங்கியது. அதேநேரம், மருத்துவமனைக்குள் துப்பாக்கிச் சூடு தீவிரமடைந்ததால், மருத்துவர் சிகிச்சை அளிக்க வார்டுக்கு வர மறுத்துவிட்டார்.

”தோட்டாக்களுக்கு” மத்தியில் பிரசவம்

சுவருக்கு ஒட்டியபடி நின்று, ஒவ்வொரு படியாக மேலே சென்று, நோயாளியை பிரசவ அறைக்கு படிக்கட்டுகள் வழியாக அழைத்துச் சென்றோம். காலையில், அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், அந்த இரவின் நினைவாக அதற்கு 'கோலி' (தோட்டா என்றும் பொருள்படும்) என்று பெயரிட்டோம். அன்றிரவு மருத்துவமனை ஐந்து மணி நேரம் தாக்குதலுக்கு உள்ளானது. இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமின்றி மேலும் ஒரு மருத்துவமனை ஊழியரும் உயிரிழந்தார்” அஞ்சலி குல்தே சம்பவத்தை விளக்கியுள்ளார்.

பயம் நீங்கியதா?

அந்த இரவின் பயம் மற்றும் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டீர்களா என்று கேட்டதற்கு, "மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது பிற ஊழியர்கள் என யாரும் அந்த இரவை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அவர்கள் கையெறி குண்டுகளை வீசிய விதம், துப்பாக்கிச் சூடு நடத்தியது, மக்களைக் கொன்ற விதம், நம்மில் யாராலும் அதை ஒருபோதும் மறக்க முடியாது. முழு நாட்டிற்கும், அது சோகமும் திகிலும் நிறைந்த ஒரு இரவு" என்று அஞ்சலி பதிலளித்தார்.

மும்பை தாக்குதல்:

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதித் தலைநகரை பேரழிவிற்கு உட்படுத்திய மூன்று நாள் தாக்குதலில் ஹோட்டல்கள், ரயில் நிலையம், ஒரு யூத மையம் மற்றும் சில இடங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பங்கேற்ற 10 தீவிரவாதிகளில், அஜ்மல் கசாப் என்ற ஒருவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டு நவம்பர் 21, 2012 அன்று தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.