திமுகவின் தேர்தல் வாக்குறுதியான இல்லத்தரசி கூப்பன் தன்னுடைய வீட்டில் விநியோகம் செய்யப்படுவதாக இயக்குநர் மோகன் ஜி பதிவு வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுகவின் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதி

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. அந்த வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டம் என்ற ஒன்றை அறிவித்தது.

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அதனை அருகில் உள்ள ஏதேனும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடையில் கொடுத்து தங்களுக்கு வேண்டிய பொருளை புதிதாகவோ அல்லது எக்ஸ்சேஞ்ச் முறையிலோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த திட்டத்தை புகழ்ந்து பதிவு வெளியிட்டிருந்தார். இந்த திட்டம் பற்றிய பேச்சு இப்போதே தொடங்கி விட்டதாகவும், இதற்கான முடிவை பெண்களே எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கூப்பன் விநியோகம் செய்யப்படுவதாக புகார்

இந்த நிலையில் சில ஊர்களில் இப்போதே இல்லத்தரசி கூப்பன் திமுகவினரால் விநியோகம் செய்யப்படுவதாக வீடியோவுடன் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இதனை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மறுத்துள்ளனர்.

இப்படியான நிலையில் இயக்குநர் மோகன் ஜி, தனது சமூக வலைத்தளப்பதிவில், “இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு தாய்மார்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் phone ல் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.. குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும்.

வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் வேறு தந்து விட்டு கிளம்பினார்கள்.. இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் விஞ்ஞானிகள்” என தெரிவித்து திமுகவை விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், “பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டும்.இது செல்லுபடியாகாது என்பது எவ்வளவு உண்மையான அவ்வளவு உண்மை விண்ணப்பித்து தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கியது போல தான் வழங்கப்படும் என்பதும் உண்மை.கடைசி நேரம் ஆக ஆக வதந்திகளும்,வன்முறைகளும் தூண்டப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், “இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை .அப்படி கொடுத்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் .விளம்பர யுக்தியாக காண்பிக்க செய்வார்கள். வீட்டுக்கு வீடு கொடுக்க மாட்டார்கள். இது அவதூறாக இருக்க வாய்ப்பு .உண்மையெனில் இந்நேரம் எதிர்கட்சி கோர்ட் வரை சென்று இருக்கும்” என கூறியுள்ளார்.