நாட்டு மக்களுக்கான இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நீதியை நிலைநாட்டவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாகவும், இந்தியாவின் நடவடிக்கையில் நியாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்சியதாகவும், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரமமும் துணிச்சலும் வெற்றியை தேடித் தந்ததாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருவதாக தெரிவித்த மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா இது போன்ற ஒரு பதிலடியை கொடுக்கும் என பயங்கரவாதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், இந்த பதிலடி, பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார் மோடி.

இக்கட்டான நேரத்தில் நமது அமைதியையும், ஒற்றுமையையும் காண முடிந்தது என பிரதமர் குறிப்பிட்டார். 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகள் சுதந்திரமாக வலம் வந்ததாகவும், தற்போது பயங்கரவாதிகளின் தலைமையகத்தை நாம் தரைமட்டமாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் மோடி.