கைக்குழந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஆர்.கே.நகர் தவெக எம்.எல்.ஏ., பல்லவியை சுற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., பல்லவி
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்லவி போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் எப்படி தேர்தல் பரப்புரையில் பங்கேற்பார், வெற்றி பெற்றால் மக்கள் பணி எப்படி ஆற்றுவார் என அடுத்தடுத்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் தன் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டு மிகச்சிறப்பாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.
விளம்பர யுத்தி என கடும் விமர்சனம்
இதனிடையே கடந்த ஜூன் 9ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கைக்குழந்தையுடன் பல்லவி கலந்துக் கொண்டார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. பிறந்து ஒருமாதம் கூட ஆகாத, குழந்தையை இப்படி பொதுவெளியில் அதிக மக்கள் கூடும் இடத்திற்கு அழைத்து வரக்கூடாது என பலரும் அட்வைஸ் செய்ய தொடங்கினர். அதிலும் ஒருபடி மேலே போய் மருத்துவரும், திமுக ஆதரவாளருமான ஷர்மிளா பல்லவியை கடுமையாக விமர்சித்தார்.
ஒரு பொது விழாவிற்குப் பச்சிளம் குழந்தையைக் கொண்டு வருவது மருத்துவ ரீதியாக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிறந்து சில நாட்களே ஆன உங்கள் பச்சிளங்குழந்தையை வெளித்தோற்றத்திற்காக ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது தாய்மை அல்ல என கடுமையாக தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பனையூரில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்திற்கும் குழந்தையுடன் பல்லவி சென்றிருந்தார். அப்போது தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் குழந்தைக்கு ஆசி வழங்கி முத்தமிட்டார்.
Also Read: குழந்தையுடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லவி.. விளம்பர யுத்தி என சாடிய டாக்டர் ஷர்மிளா!
பாரதி கண்ணம்மாவாக சித்தரிப்பு
இந்நிலையில் பல்லவியை சின்னத்திரை சீரியல் பாரதி கண்ணம்மாவில் வரும் ஒரு காட்சியை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு தவெகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவினர் மலிவு அரசியல் என சாடியுள்ளனர். கைக்குழந்தையுடன் வரும் பல்லவியை சரியாகாத மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு விளம்பர பிரியை எனவும் அந்த விமர்சன பதிவில் கூறப்பட்டுள்ளது. எனினும் வழக்கம்போல அவர் தன் மீதான விமர்சனம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வருகிறார் என பல்லவி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.