விழுப்புரம்: விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. திருநங்கைகள் விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி தேர்வானார்.

மிஸ் திருநங்கை அழகி போட்டி

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி வரும் நாளையும் (12ஆம் தேதி), அதனைத்தொடர்ந்து மறுநாளான 14ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் கைப்பெண் கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

திருநங்கைகளுக்கான அழகி போட்டி

வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இப்படி விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் திருநங்கை - 2025 என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி இன்று (11ஆம் தேதி) இரவு நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இவ்விழாவில் பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு பாட்டு பாடியும், பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வருகை

இதன் பின்னர் நடைப்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நளினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் கிரீடம்

இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடம் சென்னையைச் சேர்ந்த ஜோதா மற்றும் 3ம் இடம் சென்னையைச் சேர்ந்த திபாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போர்

அரவான் அர்ஜுனனுக்கு திருமணமாகாமல் பிறந்த மகன் என்று கூறப்படுகிறது. மகாபாரதத்தின்படி, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக காளி தேவிக்கு பலியிட ஒப்புக்கொள்கிறார், அவர் தனது தியாகத்திற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில். கொல்லப்படவிருக்கும் ஒரு மனிதனை யாரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளாததால், கிருஷ்ணர் மோகினி என்ற பெண்ணின் வடிவத்தை எடுத்து அவரை மணக்கிறார். சடங்குக்குப் பிறகு, அவர் விருப்பத்துடன் தன்னை தேவிக்கு அர்ப்பணிக்கிறார், பின்னர் அவள் அவரை விழுங்குகிறாள்.

அரவினிகள் என்றும் அழைக்கப்படும் திருநங்கைகள், அரவானின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அவரையும் அவரது தியாகத்தையும் கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வின் முழு வரிசையையும் மீண்டும் நடிக்க வைக்கிறார்கள். முதல் 16 நாட்களில், உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களால் அழகுப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற நிகழ்வுகளுடன் ஏராளமான நடனம் மற்றும் கொண்டாட்டம் நடைபெறும்.

17வது நாளில், அவர்கள் அனைவரும் அவரது மணமகள்களாக மாறும் ஒரு பெரிய விழா நடைபெறுகிறது. இறுதியாக, 18வது நாளில் அரவானின் தியாகத்தை அடையாளப்படுத்த அவரது உருவ பொம்மை தலை துண்டிக்கப்படுகிறது, மேலும் திருநங்கைகள் விதவைகளாகி, தங்கள் நகைகள் மற்றும் தாலிகளைக் கழற்றி அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்.