சேலம்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 10,500 கன அடியாக இருந்த அணை டெல்டா நீர்திறப்பு.

மேட்டூர் அணை நீர்வரத்து 6,408 கனஅடியாக சரிவு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்தது.இதற்கேற்ப கடந்த, 13ல் வினாடிக்கு, 15,040 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 14ல், 9,263 கன அடி; நேற்று முன்தினம், 6,767 கனஅடி; நேற்று, 6,408 கனஅடி என, படிப்படியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 10,000 கனஅடி, கால்வாயில், 500 கனஅடி என, 10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 118.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 118.51 அடியாக சரிந்தது.

பரம்பிக்குளம், ஆழியாறு, வால்பாறை சோலையாறு அணைகள் முழு கொள்ளளவு

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம், ஆழியாறு, வால்பாறை சோலையாறு அணைகள் முழு கொள்ளளவும் நீர் நிரம்பியுள்ளதால், மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 4.25 லட்சம் ஏக்கர் பாசன பெறுகிறது. இத்திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்டது.

பருவமழையால், பரம்பிக்குளம் அணை கடந்த ஜூலை, 26ம் தேதி நிரம்பியதும், மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது.அதன்பின், மழை பொழிவு இல்லாததால், நீர்மட்டம் மெல்ல சரிய துவங்கியது. கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்வதால், இரண்டாவது முறையாக முழு கொள்ளளவும் நிரம்பி, மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம், 71.61 அடியாக இருந்தது. வினாடிக்கு, 4,695 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், வினாடிக்கு, 4,855 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

சோலையாறு அணையில், 160 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்து, கடந்த ஜூன் 26ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் சோலையாறு அணை ஏற்கனவே ஐந்து முறை நிரம்பியது. கடந்த மூன்று நாட்களாக வால்பாறையில் கனமழை பெய்வதால், சோலையாறு அணை நேற்று காலை, ஆறாவது முறையாக நிரம்பியது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,060 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,572 கனஅடி நீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.

64 நாட்களாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றம்

ஆழியாறு அணையில், 120 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த ஜூலை 24ம் தேதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நீர்மட்டம் சிறிது குறைந்தது. தற்போது மீண்டும் மழை தீவிரமடைந்ததால், நேற்று, 119 அடியாக நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வினாடிக்கு, 1,800 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, ஏழு மதகுகள் வழியாக வினாடிக்கு, 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஜூன் 16ல் அணையின் 90 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியது. கடந்த, 64 நாட்களாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை நிலவரப்படி, அணையில், 88.29 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 752 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆறு மற்றும் கால்வாயில், மொத்தம், 768 கனஅடி நீர் வெளியேறியது. அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம், ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.