சேலம்: மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இன்று காலை 6 வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 35,800கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது.

நடப்பு ஆண்டில் 6 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இன்று காலை 6 வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக கடந்த 30ந்தேதி 118.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து இன்று காலை நடப்பு ஆண்டில் ஆறாவது முறையாக மீண்டும் நிரம்பியது. கடந்த மூன்று நாட்களில் அணையின் நீர்மட்டம் 1.35அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் போக்கியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக உபரிநீர் போக்கி எச்சரிக்கை சங்கு ஒழிக்கப்பட்டது.

உவரிநீர் போக்கி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உபரி நீர் திறக்கப்பட்டதால் உபரி நீர் கால்வாய் ஓரங்களில்தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டனர்.வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது வெள்ள நீரில் துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாது கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது அருகே சென்று செல்ஃபி எடுக்கக் கூடாது என்று வருவாய் துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47டிஎம்சி யாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 35,800கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 12500கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.