Medicines Price: நாடு முழுவதும் 900 மருந்துகளின் விலை உயர்ந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

900 மருந்துகளின் விலை உயர்வு:

நாட்டில் 2025-26 நிதியாண்டு தொடங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று முதல் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), 900க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை 1.74 சதவீதம் வரை அதிகரிள்ளது. விலை உயர்ந்துள்ள இந்த மருந்துகளின் பட்டியலில், தீவிர தொற்றுகள், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்களுக்கான மருந்துகளும் அடங்கும்.

அரசு சொல்வது என்ன?

மருந்துகளின் விலை உயர்வு தொடர்பாக மக்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன்படி, "மருந்துகள் (விலை கட்டுப்பாட்டு) ஆணை, 2013 (DPCO, 2013) இன் விதிகளின்படி, அனைத்து பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலைகளும் மொத்த விலைக் குறியீடு (WPI) (அனைத்து பொருட்கள்) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்படுகின்றன. அதே நேரத்தில், 2024-25 நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலைகள் WPI இல் ஆண்டு மாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2024 அன்று 0.00551 சதவீதம் அதிகரிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவு விலை உயர்வு:

வெளியாகியுள்ள தகவலைகளின்படி, 250 மி.கி மற்றும் 500 மி.கி ஆண்டிபயாடிக் அசித்ரோமைசின் விலை ஒரு மாத்திரைக்கு முறையே ரூ.11.87 மற்றும் ரூ.23.98 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலம் கொண்ட ட்ரை சிரப்பின் விலை ஒரு மில்லிக்கு ரூ.2.09 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலி நிவாரணி டைக்ளோஃபெனாக்கின் அதிகபட்ச விலை ஒரு மாத்திரைக்கு ரூ.2.09 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்யூபுரூஃபன் (வலி நிவாரணி) - 200 மி.கி ஒரு மாத்திரைக்கு ரூ.0.72 , 400 மி.கி மாத்திரைக்கு ரூ.1.22

நீரிழிவு மருந்துகளின் விலை (டபாக்லிஃப்ளோசின் + மெட்ஃபோர்மின் + ஹைட்ரோகுளோரைடு + கிளிமெபிரைடு) ஒரு மாத்திரைக்கு சுமார் ரூ.12.74 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசைக்ளோவிர் (வைரஸ் எதிர்ப்பு மருந்து) - 200 மி.கி: ஒரு மாத்திரைக்கு ரூ.7.74, 400 மி.கி: ஒரு மாத்திரைக்கு ரூ.13.90

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (மலேரியல் எதிர்ப்பு) - 200 மி.கி: ஒரு மாத்திரைக்கு ரூ.6.47, - 400 மி.கி: ஒரு மாத்திரைக்கு ரூ.14.04 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான டபாக்லிஃப்ளோசின், மெட்ஃபோர்மின் ஹைட்ரோகுளோரைடு (நீட்டிக்கப்பட்ட வெளியீடு) மற்றும் கிளைமிபிரைடு மாத்திரைகள் ஆகியவற்றின் கலவையின் விலை சுமார் ரூ.12.74 ஆக உயரும்

எந்தெந்த மருந்துகளுக்கு விலை உயரும்?

தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM) பட்டியலிடப்பட்டுள்ள 900 மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் மயக்க மருந்து, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், நரம்பியல் கோளாறுகள், இருதய மருந்துகள் மற்றும் காது, மூக்கு மற்றும் தொண்டை மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகள் அடங்கும். இந்தப் பட்டியலில் பாராசிட்டமால், அசித்ரோமைசின், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சில முக்கியமான மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடங்கும்.

எகிறும் ஸ்டெண்டுகளின் விலை:

ஸ்டென்ட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏப்ரல் 1 முதல் மொத்த விலைக் குறியீட்டிற்கு (WPI) ஏற்ப 1.74 சதவீதம் விலையை மாற்றியமைக்கலாம். வெற்று உலோக ஸ்டெண்டுகளின் (bare-metal stents) உச்சவரம்பு விலை ரூ. 10,692.69 ஆகவும், பயோரெசார்பபிள் வாஸ்குலர் ஸ்கேஃபோல்ட் (BVS)/ பயோடிகேடபிள் ஸ்டென்ட் உள்ளிட்ட மருந்து-எலுட்டிங் ஸ்டென்ட்டின் விலை ரூ. 38,933.14 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.