ஒவ்வொரு வாரமும், தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கனவே வெளியான குட் பேட் அக்லீ, ரெட் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இந்த வாரம் மே 9ஆம் தேதி எத்தனை படங்கள் வெளியாகிறது, என்னென்ன படங்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள்:

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் ஏராளமான படங்கள் ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான அஜித்தின் 'குட் பேட் அக்லி' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடந்து இந்த மாதம் மே 1ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படமும், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வந்த டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்த வாரம் மே 9ஆம் தேதி, ரூ.100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும், ரெட்ரோ படத்துக்கு போட்டியாக, தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 9 படங்கள் திரைக்கு வருகின்றன. இதில், மாஸ் ஹீரோவின் படங்கள் ஒன்று கூட இல்லை என்றாலும்... சிறிய பட்ஜெட் படங்கள் தான் ரசிகர்களின் ஆதரவை நம்பி களம்காணுகிறது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

கஜானா:

இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், இனிகோ பிரபாகர், செண்ட்ராயன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிறிய பட்ஜெட் படம் தான் கஜானா. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் யோகி பாபு கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப படம் வரும் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

நிழற்குடை:

நடிகை தேவயானி முதன்மை ரோலில் நடித்திருக்கும் படம் தான் நிழற்குடை. தேவயானி உடன் இணைந்து விஜித், கண்மணி, வடிவுக்கரசி, நீலிமா இசை, இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் வரும் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அம்பி:

காமெடி நடிகர் ரோபோ சங்கர் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் தான் அம்பி. இயக்குநர் பாஸர் ஜெ எல்வி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரோபோ சங்கர் உடன் இணைந்து இமான் அண்ணாச்சி, நமோ நாராயணா, மோகன் வைத்யா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரோபோ சங்கர் அம்பியாக நடித்துள்ளார். ஆனால், அவரை எல்லோருமே வீரனாகவே கருதுகின்றனர். ஒரு கட்டத்தில் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளும் ரோபோ சங்கர் அம்பியாக இருந்தாரா அல்லது வீரனாக மாறினாரா என்பது தான் படத்தோட கதை.

வாத்தியார் குப்பம்:

இயக்குநர் ரஹ்மத் ஷாகிஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் வாத்தியார் குப்பம். இந்தப் படத்தில் காலித், கஞ்சா கருப்பு, சாம்ஸ், அந்தோணி தாஸ், ரஷ்மிகா ஹிவாரி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வட இந்திய கார்ப்பரேட் நிறுவனம் வாத்தியார் குப்பத்தில் தனது கம்பெனியை திறக்க முயற்சிக்கிறது. அதற்கு ஹீரோ காலித் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன் பிறகு நடக்கும் கதை தான் படம்.

என் காதலே:

இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'என் காதலே'. இந்தப் படத்தில் நடிகர் லிங்கேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவர், மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் திவ்யா தாமஸ், கஞ்சா கருப்பு, தர்ஷன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

எமன் கட்டளை:

மறைந்த மிமிக்ரி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் எமன் கட்டளை. இயக்குநர் எஸ் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நளினி, ஆர் சுந்தர்ராஜன், வையாபுரி, சார்லி, சங்கிலி முருகன், பவர் ஸ்டார், அனு மோகன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெண்ணின் திருமணம் இரு நண்பர்களால் நின்றுவிடுகிறது. தனது மகளின் திருமணம் நிற்க தந்தை விஷம் குடிக்க, இதையறிந்த அன்பு தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் எமலோகன் சென்று எமதர்மராஜாவின் கட்டளைப்படி அந்த பெண்ணிற்கு 2 மாதம் அதாவது 60 நாட்களுக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பது தான் படத்தோட கதை. இந்த படங்கள் தவிர்த்து, சவுடு, கலியுகம், யாமன் உள்ளிட்ட 9 படங்கள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது.