<p>Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. வித்தார் , ரக்‌ஷனா , அருள்தாஸ் , மாறன் , தினந்தோறும் நாகராஜ் , சரவண சுப்பையா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். என்.ஆர் ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மருதம் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்</p>
<h2>மருதம் திரைப்பட விமர்சனம்</h2>
<p>தனது சொந்த நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் வித்தார்த். எப்படியாவது தனது மகனை பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இப்படியான நிலையில் வித்தார்த்தின் நிலத்தை வேறு ஒருவர் வங்கி ஏலத்தில் வாங்கியதாக கூறி அந்த நிலத்தை கைபற்றுகிறார். விசாரிக்கையில் வித்தார்த்தின் இறந்த தந்தை வங்கியில் லோன் வாங்கியதாகவும் அந்த கடனை அடைக்காததால் நிலம் ஏலத்தில் விடப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதில் ஏதோ சதி இருப்பதை உணரும் வித்தார்த் தனது நிலத்திற்காக போராடுகிறார். அவர் தனது நிலத்தை மீட்டாரா தனது மகனை தனியார் பள்ளியில் சேர்த்தாரா என்பதே மருதம் படத்தின் கதை. </p>
<p>பெரியளவில் திரையம்சம்ங்கள் இல்லாமல் நேரடியாகவே மொத்த கதையும் சொல்லப்படுவதால் படத்தின் கதையோடு மற்றும் கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் சுத்தமாக ஒன்ற முடிவதில்லை. சம்பிரதாயத்திற்கு வரும் பாடல்கள் , சம்பிரதாயத்திற்கு வந்து போகும் பிற கதாபாத்திரங்கள் என முதிர்ச்சியற்ற இயக்கம் படம் முழுவதும் பல்லை காட்டுகிறது. இரண்டாம் பாதியில் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் கதை அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கதையின் உணர்ச்சிக்கு ஏற்ற நேர்மையோடு வித்தார்த் நடித்துள்ளார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பெரிதாக பலம் சேர்க்கவில்லை. அழுத்தமான கதை இருந்து மிக தட்டையான திரைமொழியில் சொல்லப்பட்டதால் மருதம் ஒரு சராசரிக்கும் குறைவான படமாக நின்றுவிடுகிறது </p>