பணத்துக்காகவோ, பதவிக்காகவோ தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருந்தார். இந்த சூழலில் 24 நாட்களிலேயே அவர் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து பெருந்துறை, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,க்களும் தவெகவில் இணைந்தனர். இது மிகப்பெரிய அளவில் அரசியல் புயலை கிளப்பியது.

இந்த சூழலில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மரகதம் குமரவேல் தவெகவில் இணைந்த காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், “2026 சட்டமன்ற தேர்தல் மே 4ம் தேதி நடந்தது. அதிலிருந்து 2 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்தார். அப்போது நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என எங்களை பாண்டிச்சேரி ரிசார்ட் போக சொன்னார். அதன்பிறகு 4 நாட்கள் கழித்து எங்களை மீண்டும் அழைத்து விஷயத்தை சொன்னார்கள். அதாவது அதிமுகவின் ஒருதரப்பு திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு, இன்னொரு தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுக்கல்லாம் என முன்வைக்கப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் நாம் ஆளும்கட்சி போல செயல்படலாம். அதிகாரிகளும் நமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என காரணம் சொன்னார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா சேர்ந்து உருவாக்கிய அதிமுக எப்படி திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முடிவை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. எங்களுடைய அரசியல் எதிரி திமுக தான். அவர்களுடன் சேர்ந்தா மீண்டும் நாம் எப்படி மக்களை சந்திக்க முடியும் என்ற கேள்வி அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் இருந்தது. எனவே தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என சொன்னோம். மக்களிடத்தில் நல்ல பெயர் எடுக்கவே அப்படி சொன்னோம். இப்போதும் கூட குதிரைபேரம் என சொல்லப்படும் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு செல்லவில்லை.

மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. 2021 தேர்தலிலும் நான் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். அந்த தொகுதி வளர்ச்சி பணிக்காக சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தபோது திமுக அரசு எதையும் செய்யவில்லை. இந்தமுறை வாக்கு கேட்டுபோனபோது மக்கள் என்னை அத்தனை கேள்விகள் கேட்டார்கள். எதிர்க்கட்சியாக இருப்பதால் செய்ய மறுக்கிறார்கள் என சொன்னாலும், நீங்கள் ஒருவர் தான் எம்.எல்.ஏ., எங்களுக்கு செய்து தான் ஆக வேண்டும் என சொல்கிறார்கள்.

தொகுதி வளர்ச்சி நிதி என வருடத்திற்கு ரூ.3 கோடி தருவதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும்?.. இந்த முறை அதிமுக 3வது அணியாக தள்ளப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஜெயிக்க வைத்துள்ளார்கள்.

திமுக 10 வருடம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அதிமுகவுடன் சேரும் முடிவை எடுக்கவில்லையே?.. இப்போது தலைமை தானே எந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். அதிமுக - திமுக நிலைப்பாட்டை எங்கள் மனம் ஏற்கவில்லை. நாங்கள் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொன்னோம். கட்சியை விட்டு போவோம் என சொல்லவில்லை. சி.வி.சண்முகம் அணியில் நாங்கள் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இருநிலையாக இருந்ததால் தான் நாங்கள் 3 பேரும் தவெகவில் இணைந்து விட்டோம்” என மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.