தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம்

தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும், மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் திட்டங்களில் ஒன்று மகளிர் உரிமை தொகை திட்டமாகும். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது 2023ஆம் ஆண்டு செம்டம்பர் முதல் மகளிர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில், ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் இல்லாதிருக்க வேண்டும்.ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒருவர் மட்டும் என அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமை தொகை- நிபந்தனைகள்

மேலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், உயர் வருமானம் உள்ளவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் கட்டமாக ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. அடுத்ததாக 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேலும் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்பட்டது. எனவே ஒட்டு மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.

தவெக அரசின் தேர்தல் வாக்குறுதி

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போட்டியாக தவெக சார்பாக வெளியிடப்பட தேர்தல் வாக்குறுதியில் 2,500 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டது. 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பில் தமிழக மகளிர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக நிதி நிலைமை, கடன் சுமை தொடர்பாக வெள்ளை அறிக்கையானது இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யுடன், நிதி அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டனர் . அப்போது தமிழக அரசின் நிதி நிலை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் உரை வருகிற 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மகளிர் உரிமை தொகை ரூ. 2500 எப்போது.?

எனவே தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருப்பது மகளிர் உரிமை தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்துவதாகவும். மேலும் தமிழகம் முழுவதும் மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்ட அறிவிப்பு. எனவே இந்த இரண்டு திட்டங்களில் எந்த திட்டத்தை அறிவிப்பது. இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே ஆளுநர் உரை அல்லது தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டார தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் இல்லாமல் 2500 ரூபாய் நிதி உதவியை பெற பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.