விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 3.78 லட்சம் நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

3.78 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் 3.78 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 444 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்த 72 ஆயிரம் மனுக்கள் மீதான ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' 2023ம் ஆண்டு துவங்கப்பட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்

இந்த திட்டத்தில் இணைவதற்கு சில நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது. அதில், நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். அதே நேரம் தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் அதிகரித்து வந்தன.

இத்திட்டத்தில், மாவட்டத்தில் 3 லட்சத்து 78 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக தகுதி பெற்றனர். அதன்படி, மாதந்தோறும் அரசு உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் 3.78 லட்சம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வீதம் மொத்தம் 444 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகைத் திட்டத்தில் புதிய தளர்வு

இந்நிலையில், இத்திட்டத்தில் சேர தவறிய தகுதியான பெண்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிக்கப்பட்டது. மேலும், உரிமைத் தொகைத் திட்டத்தில் புதிய தளர்வுகளை அரசு அறிவித்து. இந்தத் திட்டத்தின் பயனை தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

அதன்படி அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த, ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். கணவரால் கைவிடபட்ட 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்கள், பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பலர் விண்ணபித்துள்ளனர்.

மாவட்டத்தில் கூடுதலாக 72 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு புதிதாக, 72 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் வருவாய்த்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி, அரசிற்கு தாக்கல் செய்துள்ளனர். மிக விரைவில் விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக 72 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலரும் பயனயனடைவர்கள்.