பள்ளிக்கூடங்கள் அருகே எவ்வாறு கேஸ் குடோன் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. - நீதிபதிகள் கேள்வி. அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது ? - நீதிபதிகள் கேள்வி.

எளிதில் வெடிக்கக்கூடிய எரிவாயு சேமிப்புக் கிடங்கு

நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்த எம். மணிமாறன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு..," திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட செல்லப்பநாயக்கன்பட்டி சாலையில் தனியார் கேஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கேஸ் குடோனுக்கு அருகிலே தனியார் பள்ளி புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. ஆபத்தான மற்றும் எளிதில் வெடிக்கக்கூடிய எரிவாயு சேமிப்புக் கிடங்கின் மிக அருகில் பள்ளி அமைவது, அங்கு பயிலவுள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கேஸ் குடோன்களைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், உரிய ஆய்வு மற்றும் அனுமதி இன்றி இந்த கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் பள்ளி கட்டடப் பணிகளுக்கும், அங்கு வகுப்புகளைத் தொடங்குவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

நீதிபதி கேள்வி

இந்த மனு நீதிபதிகள் சி . வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பள்ளிக்கூடங்கள் அருகே எவ்வாறு கேஸ் குடோன் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தாசில்தார் நேரில் ஆய்வு செய்து விதிமுறைகள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.