தனியார் கண் மருத்துவமனை மருத்துவர் திரிவேணி ABP Nadu - விற்கு அளித்த பேட்டியில் ;

பரவ நிலை மாற்றத்தால் வெகு விரைவாக நோய்கள் பரவக் கூடும். அதில் ஒன்றான மெட்ராஸ் ஐ - யானது தற்போது பரவ தொடங்கி உள்ளது. இது பெரும்பாலும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணில் இருந்து வெளி வரும் நீர் மூலமாகவே இது பரவுகிறது. அதாவது மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கண்ணைத் தொட்டு விட்டு, வேறு எதையாவது தொடும் போது இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது.

மெட்ராஸ் - ஐ அறிகுறிகள் என்னென்ன ? | Madras Eye Infection Symptoms

கண்ணில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், கண்ணில் இருந்து மெழுகு போன்ற ஒன்று வெளியேறுவது, சூரிய ஒளியைப் பார்த்தாலே கண் கூசுவது ஆகியவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

என்னென்ன செய்ய வேண்டும்

கார்னியா பாதிக்கப்பட்டால் , மங்கலான பார்வையை ஏற்படுத்தும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை செய்த பின்பு மருத்துவர்கள் கூறும் மருந்துகளை மட்டுமே கடைகளுக்கு சென்று வாங்க வேண்டும். தாங்களாகவே மருந்துகளை வாங்க கூடாது.

தனிமைப்படுத்த வேண்டும்

பொதுவாக நாம் பயன்படுத்தும் துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் மேக் - அப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகள் மூலமாகவே இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது. எனவே, மெட்ராஸ் ஐ வந்தால் முதலில் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்களில் இருந்து வெளியேறும் நீரைத் துடைக்க டிசு பேப்பரை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வந்தால் உடனே அதை நிறுத்துங்கள். மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு புதிய லென்ஸ்களை பயன்படுத்துங்கள். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் தான் இது வேகமாகப் பரவக்கூடும். எனவே, மெட்ராஸ் ஐ பாதிப்பு முழுமையாகச் சரியாகும் வரை , அதாவது கண் சிவத்தல் அல்லது நீர் வெளியேறுதல் முழுமையாக நிற்கும் வரை மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.