சைபர் கிரைம் - புகார் மனு

சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் வசிக்கும் 49 வயது பெண்மணி சைபர் கிரைம் ஆன்லைன் போர்டல் வழியாகவும் , மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகியும் கொடுத்தப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தான் எந்த வங்கியிலும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்திலும் லோன் எதுவும் எடுக்காமல் இருக்கும் நிலையில், கடந்த 20.02.2026 அன்று, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் தான் லோன் எடுத்து விட்டு இன்னும் திருப்பி செலுத்தாமல் இருப்பதாகவும் கூறி , அவர்கள் வழக்கறிஞர் என்றும் உயர்நீதிமன்றத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

தொலைபேசியில் ஆபாச பேச்சு

மீண்டும் கடந்த 23.02.2026 அன்று அதே தொலைபேசி எண்ணிலிருந்து பேசிய பெண் மீண்டும் லோன் தொகை செலுத்த கூறி வற்புறுத்தியும், தான் அவரிடம் ஏன் திரும்ப திரும்ப தொல்லை செய்கிறீர்கள் என கேட்ட போது , ஆண் நபர் ஒருவர் தன்னை மிகவும் ஆபாசமாக பேசியதால், தான் போனை கட் செய்து விட்டதாகவும் மீண்டும் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் பேசிய நபர் யார் என கண்டுபிடிப்பதற்காக அதே எண்ணிற்கு பேசிய போது அந்த நபர் தன்னை குமார் என்றும் திருமுருகன் என்றும் மாற்றி மாற்றி பேசி தன்னுடைய பெண்மையை இழிவு படுத்தும் வகையில் அவதூறாக பேசினார்.

மீண்டும் 25.02.2026 அன்று மனுதாரரிடம் பேசிய நபர் தன்னுடைய பெயர் குமார் என்றும் , தான் ஒரு அட்வகேட் என்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு தன்னை ஆபாசமாகவும், அவதூறாகவும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசினார்.

அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார். அதன் பேரில் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனியார் நிறுவன லோன் ரெக்கவரி ஏஜெண்ட்

இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடைய, சென்னை அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் போரூர் பகுதியை சேர்ந்த சரண் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சரண் தனியார் நிறுவனத்தில் Loan Recovery Agent ஆக வேலை செய்து வருவதும், இவர் லோன் தொகை செலுத்தாத கஸ்டமர்களிடம் தொடர்பு கொண்டு பெயரை மாற்றியும் இருக்கும் இடத்தை மாற்றி அட்வகேட் பேசுவதாகவும், அட்வகேட் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், சென்னை ஹைகோர்ட்டில் இருந்து பேசுவதாகவும் கூறி மிரட்டி வந்துள்ளார்.

மேலும் இவர் லோன் எடுக்காத பொது மக்களையும், லோன் வாங்கிய வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொண்டு மிரட்டியதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சரண் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.