கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்வீட்டு பெண்ணுடன் தகாத உறவு இருந்த நிலையில் தன்னுடைய குழந்தையை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்துள்ள கெலமங்கலம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் சின்னப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற 30 வயதுமிக்க நபர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.

எதிர் வீட்டு பெண்ணுடன் தொடர்பு

இதனிடையே பாரதிக்கும் அவர் எதிர் வீட்டில் வசிக்கும் சுமித்ரா என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டுள்ளனர். இருவரும் பெண்கள், அக்கம் பக்கத்தினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

இப்படியான நிலையில் சுமித்ரா மீதான அன்பால் பாரதி அவரது பெயரை தனது மார்பு பகுதியில் டாட்டூ குத்தியுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையேயான தொடர்பு சுரேஷூக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாரதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுமித்ராவை அழைத்து இந்த உறவை கைவிடுமாறும் கூறியுள்ளார்.

திடீரென இறந்த குழந்தை

இதனிடையே நவம்பர் 4ம் தேதி சுரேஷ் மதிய நேரத்தில் உணவருந்த தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பாரதியிடம் விசாரித்துள்ளார். அவர் தான் குழந்தையை பால் குடித்து தூங்க வைத்ததாக தெரிவித்த நிலையில் புரையேறி இருமல் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறியும் சுரேஷ் மறுத்து உடலை பெற்று நல்லடக்கம் செய்திருக்கிறார்.

ஆடியோவால் வெளியான உண்மை

இதனிடையே பாரதியின் செல்போனை எதேச்சையாக அவர் சோதனை செய்த போது அதில் சுமித்ராவுடன் பேசும் ஆடியோ ஒன்று இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்த நிலையில் குழந்தை அழுததால் பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா சொல்ல, பாரதியும் அதனை செய்து குழந்தையை வாயைப் பொத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்திருக்கிறார்.

இதன் புகைப்படங்களையும் அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் போலீசுக்கு செல்வதை அறிந்த பாரதி அவரை தொடர்பு கொண்டு பேசி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து பாரதி, சுமித்ரா மீது கெலமங்கலம் போலீசில் புகாரளித்தார். இருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.