அதிமுகவில் மிகவும் பிரபலமானவர் கோவை சத்யன். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (IT Wing) முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சியின் இணையதளப் பிரச்சாரங்களிலும் சமூக ஊடகச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர். இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) தலைவர் பொறுப்பில் இருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கோவை சத்யன் அவர்கள், இன்று முதல் அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊடகவியல் செயலாளர் பொறுப்பில், கோவை சத்யன், PGDM., (டெம்பிள் வியூ அபார்ட்மெண்ட்ஸ், தியாகராய வீதி, தியாகராயநகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் இந்த கோவை சத்யன்

இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஐடி (Information Technology) மற்றும் கார்ப்பரேட் துறைகளில் உயர்பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கார்ப்பரேட் துறையில் பெற்ற அனுபவம் காரணமாக, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை (IT Wing) நவீனப்படுத்துவதிலும், தரவு அடிப்படையிலான பிரச்சாரங்களை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக (National Spokesperson) நியமிக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஊடகங்களில் கட்சியின் அதிகாரப்பூர்வக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அரசியல் ரீதியாகவும் சுடச்சுட பதிலடி தருவதில் பெயர் பெற்றவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில், அதிமுகவிற்குள் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் ஐடி பிரிவை வலுப்படுத்திய முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.