கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், கணவன்–மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

பைல் கிளியர் செய்ய ரூ.60 ஆயிரம் பேரம்

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர், தனது நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய Input Tax தொகையை திரும்பப் பெற வணிகவரித்துறையில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த கோப்பை முடித்து வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அபினேஷ் மறுத்த நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.60 ஆயிரம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லஞ்சம் வழங்க விரும்பாத அபினேஷ், இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ.60 ஆயிரம் பணத்துடன் அபினேஷ் சென்றுள்ளார்.

அப்போது உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரிடம் பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கொடிசியா மைதானம் அருகே தனசேகரன் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்ற அபினேஷ், அவரது காரில் ஏறி பணத்தை வழங்கியுள்ளார்.

சிக்கிய வணிகவரித்துறை அதிகாரி

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தனசேகரனை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார், உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் தனசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.