உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த கூவாகம் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் ஒன்றுகூடும் இந்த ஆண்டின் சித்திரை பெருவிழா, நேற்று (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது. திருநங்கைகள் தங்கள் கணவராக பாவித்து கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நேற்று சாகைபார்த்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் கூவாகம் நத்தம் சிவாலயாங்குளம் வேலூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களது வீடுகளில் படையல் செய்து ஊர்வலமாக கொண்டு வந்த கூழ்குடங்களை கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கூவாகம் நத்தம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் மட்டுமின்றி உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகாபாரதப் போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் கொண்ட போது பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும் அதற்கு கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அதற்கு மூன்றாவது நபராக அரவணை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக அரவணை சந்தித்து கேட்டபோது தான் பலியாக ஒப்புக்கொண்ட அரவான் அதற்கு முதல் நாள் தனக்கு திருமணம் செய்து திருமண வாழ்க்கையை தான் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விடுக்கிறார். இடிந்தால் பலியாகப் போகும் ஒருவரை மணக்க எந்த பெண்ணும் முன் வராத நிலையில் கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உருமாறுகிறார். தொடர்ந்து அரவணை திருமணம் செய்து கொண்டு இரவு முழுவதும் ஒரு பெண் கொடுக்கும் அனைத்து சுகத்தையும் மோகினி அரவனுக்கு கொடுத்த நிலையில் மறுநாள் காலை அரவான் பலி கொடுக்கிறார். இதுவே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் வரலாறு. அதனால் கூவாகம் கூத்தாண்டவர் தங்கள் கணவராக பாவித்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவிற்கு வருவார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

இந்தத் திருவிழா அடுத்த 15 நாட்களுக்குப் பல்வேறு சடங்குகளுடன் நடைபெற உள்ளது. அதன் முக்கிய கால அட்டவணை பின்வருமாறு:

புதன்கிழமை: மாலை பந்தலடியில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏப்ரல் 27: மாலை கம்பம் நிறுத்துதல் நடைபெறும். அன்று உள்ளூர் கிராம மக்கள் கூத்தாண்டவரை கணவராகக் கருதி தாலி கட்டிக்கொள்வார்கள்.

ஏப்ரல் 28 : அன்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காகத் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், மணப்பெண் கோலம் பூண்டு பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

ஏப்ரல் 29 : அதிகாலை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் முக்கிய வீதிகள் வழியாகப் பந்தலடியை அடையும்.

துயரமும் பிரிவும் - விதவைக் கோலம்:

விழாவின் உருக்கமான பகுதியாகக் கருதப்படுவது அரவான் பலியிடுதல் நிகழ்வாகும். தேர் பந்தலடியை அடைந்ததும், மகாபாரதப் போரில் அரவான் பலியானதை நினைவு கூரும் வகையில் சடங்குகள் நடைபெறும். "தங்கள் கணவரான அரவான் போரில் இறந்துவிட்டதாகக் கருதி, திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுது புலம்புவார்கள். பின்னர் பூசாரி கையால் வளையல்களை உடைத்து, தாலியை அறுத்துவிட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலம் பூணுவார்கள்."

விழா நிறைவு: திருவிழாவின் இறுதியாக அடுத்த மாதம் (மே) 1-ம் தேதி, தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் மஞ்சள் நீர் விளையாட்டுடன் சித்திரை பெருவிழா அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூவாகம் கிராமமே தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளது.