மதுபானக்கடையில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசு குடிமகனுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

நடந்தது என்ன?

கேரளம் மாநில அரசின் கீழ் கேரள மாநில பானங்கள் கழகம் (KSBC) செயல்படுகிறது. அதாவது நம் ஊரில் டாஸ்மாக் கடைகள் இயங்குவது போல அங்கு KSBC கடைகள் செயல்படுகிறது. இதனிடையே அங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு குடிமகன் 650 மில்லி அளவு கொண்ட பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக அவர் ரூ.180 கொடுத்துள்ளார். ஆனால் அந்த பீர் பாட்டிலில் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.170 என தெரிவிக்கப்பட்டிருந்தது.

<iframe title="Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட் | Annamalai | Vijay | TVK" src="https://www.youtube.com/embed/Sv5wTt0oFVQ" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்பட்டது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மதுபானக்கடை ஊழியர்கள் தரப்பு பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைத் தான் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துக் கொண்டனர். ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் போய் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாகவும் பதிலளித்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் தனக்கு நியாயமும், தகுந்த இழப்பீடும் கிடைக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.

ரூ.10 அதிகம் வசூலிக்கப்பட காரணம்

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பீர் பாட்டிலின் அதிக்கப்பட்ச சில்லறை விலையான ரூ.170ஐ விட கூடுதலாக ரூ.10 வசுலிக்கப்பட்டதை கேரள மாநில பானங்கள் கழகம் ஒப்புக்கொண்டது. அதுமட்டுமல்லாமல் அதற்கு காரணமாக கேரளம் அரசு அறிமுகப்படுத்திய சமூகப் பாதுகாப்பு வரி விதிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து மதுபான விலைகளில் செய்யப்பட்ட திருத்தங்களே இந்த உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!

இந்த விலையில் மாற்றம் வரும்போதெல்லாம் ஏற்கனவே பழைய விலை அச்சிடப்பட்ட மதுபாட்டில்களில் மீண்டும் புது விலைக்கான லேபிள் ஒட்டுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் வாதிடப்பட்டது. திருத்தப்பட்ட விலைகள் குறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட மதுபானக் கடையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரர் ஊழியர்களை திட்டி அன்றைய நாளின் விற்பனையை சீர்குலைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.

இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

ஆனால் வர்த்தக விதிகளின்படி, எந்தவொரு முன் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளையும், அதன் அச்சிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட அதிக விலையில் விற்பனை செய்வதை குற்றம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதனால் இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். அரசின் உத்தரவுகளை எல்லாம் நுகர்வோர்கள் அறிந்திருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. விலை உயர்வை அவர்கள் அறியாமலும் இருந்திருக்கலாம். MRP விலை என்பது மனுதாரருக்கும், மதுபான விற்பனையாளருக்கும் இடையிலான ஒப்பந்த விலையாகும். அதுமட்டுமல்லாமல் நுகர்வோர் உரிமைகளை நிலைநாட்ட மனுதாரர் பல இடங்களுக்கு அலைந்துள்ளார்.

எனவே, கூடுதல் தொகையான ரூ.10ஐ, இந்த புகார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 9% வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் எனவும், ரூ.15,000 இழப்பீடாகவும், ரூ.10,000 வழக்குச் செலவுகளுக்காகவும் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் கேரள மாநில பானங்கள் கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.