சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நெருங்கி வரும் வேளையில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் திமுக-வுடன் புதிய கூட்டணிக் கட்சியான மக்கள் நீதிமய்யத்திற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கமல் மீது அப்செட்:

இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டணி நலன் கருதி இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், திமுக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்துள்ளார். இது கடமை என்று கமல்ஹாசன் பெருந்தன்மையாகவும், இது கடமையல்ல தியாகம் என்று மு.க.ஸ்டாலினும் நெகிழ்ச்சியாகவும் மாறி, மாறி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால், கமல்ஹாசனின் இந்த முடிவு மக்கள் நீதிமய்யத்தின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது.

கடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன்பின்பு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தவர் திமுக-வுடன் கூட்டணி சேர்ந்தார். கூட்டணியில் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பெற்றறார்.

ஏமாற்றத்தில் நிர்வாகிகள்:

திமுக-வுடன் இந்த தேர்தலிலும் இணைந்து களமிறங்கியுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதால் மநீம தயக்கம் காட்டியது. இந்த சூழலில், மு.க.ஸ்டாலினின் நீண்ட கால நண்பரான கமல்ஹாசன் அவருடன் பேசி டார்ச்லைட் சின்னத்தில் போட்டி என்பதை உறுதி செய்வார் என்று எதிர்பார்த்த அவரது கட்சியினருக்கு, கமல்ஹாசன் போட்டியில்லை என்ற பேரதிர்ச்சி தந்தார்.

இந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் திமுக ஆதரவில் களமிறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணத்தில் மெளரியா, அருணாச்சலம், சினேகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். ஆனால், கமல்ஹாசன் போட்டியிடவில்லை ஆதரவு மட்டும் தெரிவிக்கிறோம் என்று கூறியிருப்பதால் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிர்வாகிகள், மக்கள் நீதிமய்யம் அதிகார பலம் பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் நீதிமய்ய நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற கனவு சிதைந்த கவலையில் முக்கிய நிர்வாகிகள் சிலர் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த தேர்தலில் எப்படி?

இன்னும் சில நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைவர் பதவி வகிக்கும் கமல்ஹாசன் மட்டும் ராஜ்யசபா பதவியை வாங்கிக் கொண்டு கட்சியையும், கட்சி நிர்வாகிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார் என்று விமர்சனங்களையும், ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்சி நிர்வாகிகள் அதிருப்தியை சமாளிக்க கமல்ஹாசன் என்ன செய்யப்போகிறார்? அவர்களை எப்படி சமாதானப்படுத்துவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிக வா்ப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.