தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அதிமுகவில் சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் கவிஞர் சல்மா, வில்சன், சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஒரு இடத்தை மட்டும் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று திமுக சார்பில் கவிஞர் சல்மா, வில்சன், சிவலிங்கம் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் பேரவை கூடுதல் செயலாளரிடம் தனது வேட்புமனுவை கமல்ஹாசன் சமர்ப்பித்தார். பின்னர், முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகியோர் இருந்தனர்.

நடிகர் முதல் அரசியல்வாதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். திமுக - அதிமுகவிற்கு மாற்றுக்கட்சியாகவும், மக்களின் நம்பிக்கையை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியே மிஞ்சியது. தமிழ் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தினாலும், அரசியலுக்கு அவர் கைக்குழந்தை என விமர்சிக்கப்பட்டது. ஆனால், நான் சினிமாவில் இருக்கும்போதே அரசியல்வாதி தான் என பதிலடி கொடுத்தார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மநீம தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தல் தோல்வி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி 51,481 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை தவறவிட்டார்.

திமுக கூட்டணி

2021 தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்த கமல்ஹாசன் திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். 2024 மக்களவை தேர்தலில் மநீம திமுகவுடன் கூட்டணியில் இருப்பதையும் கமல்ஹாசன் அறிவித்தார். பின்பு காங்கிரஸ் கட்தி தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசியது கடும் சர்ச்சையை சந்தித்தது.

மன்னிப்பு கேட்காத கமல்

இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் பெங்களூரு உயர்நீதிமன்றம் கமலை மன்னிப்பு கேட்க கெடு விதித்தது. எதற்கும் அசைவு கொடுக்காத கமல்ஹாசன் தமிழ்தான் என் உயிர் என நிரூபித்தார். கடைசி வரை தமிழும் தமிழ் மக்களும் தான் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என பெருமிதம் அடைந்தார். கூட்டணி கட்சிகளின் ஆதரவும் பெருகியுள்ள நிலையில், வரும் காலங்களில் எம்.பி. ஆக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வரும் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சை மாநிலங்களவையில் காண 8 கோடி தமிழ் மக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.