உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு தெலுங்கானா மாநில அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநில அரசின் கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் மார்ச் 18ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. மாதப்பூர் ஹைடெக்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் மற்றும் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசனின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சினிமாவின் முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருதானது தெலுங்கு சினிமாவிற்கு 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்மூலம் கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.

தெலங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார். பான்-இந்தியா சினிமா இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல மொழிகளில் கமல்ஹாசன் ஆரம்ப காலத்தில் செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக அமைந்துள்ளது. அவரது புதுமையான கதைக்களம்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவைத் தொடர்ந்து செதுக்கி வருவதாலும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “ என்னுடைய 16 வயதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த ஸ்ரீமந்துடு என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற ஹைதராபாத் வந்தேன். அன்று முதல் நான் ஹைதராபாத்துடன் இணைந்துள்ளேன். நான் சிங்கிதம் சீனிவாசனுடன் 50 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவருக்கு விருது வழங்குவது எங்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். சிரஞ்சீவி அரசியலில் எனக்கு மூத்தவர், சினிமாவில் எனக்கு இளையவர்.

இப்போது நாங்கள் 70 வயதில் இருக்கிறோம். கத்தாரின் பெயரில் விருது வழங்குவது மிகவும் நல்லது. நானும் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன். ஒரு கவிஞரையும் புரட்சியாளரையும் இப்படி மதித்ததற்கு நன்றி. இனி டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என்று இல்லை. இப்போது எல்லாம் ஒன்றுதான். ஒரே இந்திய சினிமா. எனக்கு விருது வழங்கியதற்கு மட்டுமல்ல, என்னை இங்கு அழைத்ததற்கும், நந்தி விருதுகளை மீண்டும் கத்தார் விருதுகள் என்ற பெயரில் வழங்கியதற்கு நன்றி என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காந்தா ராவ் விருதைப் பெற்ற நடிகர் ஆர். நாராயணமூர்த்தி பெற்றார். தெலங்கானாவில் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த நந்தி விருதுகள் தற்போது பெயர் மாற்றப்பட்டு கத்தார் விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.