லட்சக்கணக்கான மக்கள் கூடவுள்ள நிலையில் வைகையாற்றிற்குள் அதிகளவு மக்கள் இறங்குவதை கட்டுப்படுத்த மூன்றடுக்கு தடுப்பு வேலிகள் அமைப்பு.

மதுரை நோக்கி அழகர் கிளம்புகிறார்

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர்கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக இன்று மாலை கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பாடாகும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து நாளை காலை தொடங்கி மறுநாள் அதிகாலை வரை மாநகர் பகுதி முழுவதும் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எதிர்சேவை நடைபெறும். இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 12 ஆம் தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறும்.

வர்ணம் பூசும் பணிகள்

இந்நிலையில் இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் ஆற்றுப்பகுதியில் மண்டகப்படி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. கள்ளழகர் எழுந்தருளும்போது வைகையாற்று பகுதிக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வைகையாற்று பகுதிக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக ஆழ்வார்புரம் மற்றும் நெல்பேட்டை ஆகிய வைகையாற்று கரையோர பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகள் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் கள்ளழகர் தங்கு குதிரை வாகனத்தில் எழுந்தரும் ஆற்றுபகுதியில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது

கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் அமெரிக்கன் கல்லூரி மற்றும் செல்லூர்சாலை, வைகையாற்று பகுதியில் மேம்பால தூண்கள் முழுவதுமாக தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் மேம்பால பணிகளுக்காக வைக்கப்பட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டு முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது. கிருதுமால் நதி கால்வாய் அமைந்துள்ள பகுதி முழுவதிலும் மிகப்பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள பக்தர்கள் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக 12 அடி உயரத்திற்கு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆழ்வார்புரம் பகுதி முதல் தீர்த்தவாரி நடைபெறக்கூடிய ராமராயர் மண்டகப்படி வரை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் மட்டும் வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் வைகையாற்றிற்குள் இறங்கக்கூடிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்வதால் கழிவுநீரில் இறங்குவதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது வரக்கூடிய வாகனங்களை நிறுத்துவதற்கான மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியான பார்க்கிங் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வைகை வீரன்

இதனிடையே மதுரை மாநகர காவல்துறை சார்பாக முதன்முறையாக கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளின் போது பாதுகாப்பு தொடர்பான புகார்களை காவல்நிலையத்திற்கு சென்று அளிப்பதை மாற்றி தங்களுக்கான பாதுகாப்பு பிரச்சனை உள்ள பகுதியிலயே உடனுக்குடன் புகார் அளிக்கும் வகையில் "வைகை வீரன்" என்ற QR கோடு Scan மூலமாக புகார் அளிக்கும் நடவடிக்கையாக சுவரொட்டிகள் மதுரை மாநகரத்தில் சித்திரை திருவிழா நடைபெறும் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் வைகை வீரன் QR CODE ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.