Jurassic World Rebirth Trailer: ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் படம், வரும் ஜுலை மாதம் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக அழிந்துபோனதாக கூறப்படும் டைனோசர்கள் தொடர்பான, ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கின் கனவு மூலமாக ஜுராசிக் பார்க் எனும் பிரமாண்ட திரைப்பட உலகம் உருவெடுத்தது. டைனோசர்களுக்கான ஒரு பூங்காவா ஜுராசிக் பார்க் எனும் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, டைனோசர்களை மையமாக கொண்டு, இரண்டு ட்ரையாலஜி அதாவது 6 படங்கள் வெளியாகி பெரும் அளவில் கல்லா கட்டியுள்ளது. இந்நிலையில் தான், அந்த கதைகளத்தின் அடுத்த முயற்சியாக ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைனோசர் Vs அவெஞ்சர்:

ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் திரைப்படத்தின் கதைக்களமானது, இந்த திரைப்பட உலகின் தொடக்கப் புள்ளியான ஜுராசிக் பார்க்கை நோக்கி நகர்கிறது. கடந்த படங்களில் அங்கிருந்த டைனோசர்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டாலும், சில மோசமான, ஆபத்தான மற்றும் கட்டுக்கடங்காத டைனோசர்கள் மட்டும் அந்த பூங்காவிலேயே கைவிடப்பட்டன. அந்த டைனோசர்களின் டிஎன்ஏ மூலம், பல நோய்களுக்கான தீர்வை காண முடியும் என ஒரு மருத்துவக் குழு நம்புகிறது. இதற்காக டைனோசர்களின் டிஎன்ஏ மாதிரியை சேகரிப்பதற்க்காக, ஒரு குழு ஜுராசிக் பார்க்கிற்கு செல்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அந்த இடத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள், ஆபத்துகள் அனைத்தையும் கடந்த அந்த குழு இலக்கை அடைந்ததா? உயிருடன் வெளியே தப்பித்து வந்ததா? என்பதே கதை. ஜுராசிக் பார்க்கிற்கு செல்லும் அந்த குழுவை வழிநடத்தும் நபராக அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லர் ஜொஹன்சன் நடித்துள்ளார். அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில், இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற மஹெர்சலா அலி நடித்துள்ளார்.

ட்ரெய்லர் எப்படி?

ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் திரைப்படத்தின் ட்ரெய்லர் உருவாக்க அளவில் மிகவும் தரமானதாக உள்ளது. ட்ரெய்லர் காட்சிகள் கைவிடப்பட்ட ஜுராசிக் பார்க்கின் பிரமாண்டத்தை தத்ரூபமாக கண்முன் காட்டியுள்ளன. முதல் பாகத்தில் இடம்பெற்ற டைனோசர்கள் கூட இந்த படத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளன. பறக்கும், தண்ணீரில் மிதக்கும் மற்றும் வேட்டையாடக் கூடிய பல்வேறு வகையான டைனோசர்கள் பிரமாண்டமாகவும், வேட்டையாளிகளாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மோசத்திலும் மிகவும் மோசமான டைனோசர்களிடம், இருந்து அந்த குழு மாட்டித் தவிப்பதையும் ட்ரெய்லர் காட்டுகிறது. மொத்தத்தில் டைனோசர் பட ரசிகர்களுக்கு, ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த் திரைப்படம் ஒரு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் மூன்று படங்களின் எழுத்தாளர்களே இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளதால், கடைசியாக வெளியான மூன்று படங்களை போல அல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவரும் என நம்பப்படுகிறது.