ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு பாஜக அரசு தான் காரணம் என சொன்ன தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவு

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஜனநாயகன் முழுப்படமும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நடிகராக நான் இந்த படம் இணையத்தில் வெளியானதை கண்டிக்கிறேன். பட நிறுவனம் சைபர் கிரைம், காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். யார் இந்த குற்றத்தை செய்தார் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது என்பது மிக மிக அவசியம். நான் இந்த விஷயத்தில் பட நிறுவனத்திற்கு முழு ஆதரவாக இருக்கிறேன். ஒரு படம் எடுக்க மிக மிக கடினம். முதலீடு, உழைப்பை ஒருவரை திருடுவது மிக தவறானது. அன்று திருட்டு விசிடி பிரச்னை, இன்று படம் இணையத்தில் கசிந்தது என சொல்கிறோம்.

இதற்கு கடுமையான நடவடிக்கைகளை காபந்து திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம்

ஆதவ் அர்ஜூனா இதனை அரசியலாக்க கூடாது. அவர் எதைப் பார்த்தாலும் அரசியலாக்கி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த ஜக்குபாய் படம் ரிலீசானது. அந்த படம் இணையத்தில் ரிலீசுக்கு முன்பே வெளியாகிவிட்டது. அப்போது சினிமாவுலகம் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அந்த சமயத்தில் நான் திமுகவில் இருந்து வெளியே வந்து விட்டேன். அன்றைக்கு ஜக்குபாய் படம் வெளியானதற்கு திமுக தான் காரணம் என்பதை சுட்டிக்காட்டவில்லை.

நாம் எதற்காக எதை பயன்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தவெகவுக்கு ஒன்று நடந்து விட்டால் இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் தான் காரணம் என சொல்லக்கூடாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் ஆதாயம் காண வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.

மக்களுக்கான அரசியல் செய்யுங்கள்

சென்சார் பிரச்னை தொடங்கி படம் வெளியானது வரை பின்னணியில் பாஜக அரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இருப்பதாக ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மத்திய அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும் தணிக்கை துறை சுதந்திரமானது. அங்கிருந்து தான் படம் லீக் ஆகி இருக்குமா, இல்லையென்றால் எல்.முருகன் சென்சார் போர்டை தொடர்பு கொண்டு வெளியிட சொன்னாரா?, நடக்க சாத்தியமில்லாத விஷயத்தை ஆதவ் அர்ஜூனா தெரிவிக்கிறார்.

மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய உங்கள் கொள்கை, கோட்பாடுகளுடன் அரசியல் செய்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.