<p>இஸ்ரேல் – காசா இடையே நடந்து வரும் போர் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.</p>
<p>காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலையும் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பேஜர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்காவிட்டாலும் இதன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக தகவல் வெளியாகியது.</p>
<p>பேஜர் தாக்குதல், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இஸ்ரேல் மீது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று திடீரென 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>ஈரானின் இந்த தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p>