Iran USA War: ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்ட முடியாது என, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

டஃப் கொடுக்கும் ஈரான்..

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய ராணுவ நடவடிக்கையானது, மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. அதற்கு தக்க பதிலடி தரும் விதமாக ஈரானும் வளைகுடா நாடுகள் மீது பதிலடி தந்து வருகிறது. இந்த போர் எளிதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாக முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெஹ்ரானின் போர் நடவடிக்கைகள் எதிரணிகளை ஆட்டம் காண செய்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானின் ஏவுகணை உற்பத்தி செய்யும் திறனை சிதைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

”ஈரானால் ஏவுகணைகளை உருவாக்க முடியாது”

தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசுகையில், “ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவும் முடியாது. பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உருவாக்க முடியாது. இந்த போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரான் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. ஏவுகணைகளையும், தயாரிக்க முயற்சிக்கும் அணு ஆயுதங்களுக்கான பாகங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தான் இப்போது அழித்து கொண்டிருக்கிறோம். அவர்களது ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் கிடங்கு சிதைக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசியுள்ளார். ஆனால், இதற்கான ஆதாரங்கள் எதையுமே அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”ட்ரம்ப் நாம சொன்னா கேட்பாரா?”

தொடர்ந்து, அமெரிக்காவை இஸ்ரேல் தான் இந்த போரில் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “நீங்கள் இதை தான் செய்ய வேண்டும் என யாராவது அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சொல்ல முடியும் என நினைக்கிறீர்களா? அமெரிக்காவிற்கு எது நல்லது என நினைக்கிறாரோ அதையே ட்ரம்ப் எப்போதும் செய்கிறார். இந்த ராணுவ நடவடிக்கையிலும் இலக்கு என்பது தெளிவாக உள்ளது. அதிபர் டிரம்புடன் என்னுடைய நெருங்கிய ஒருங்கிணைப்புடனும், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்புடனும், எங்களது ராணுவங்கள், உளவுத்துறை சேவைகள் ஆகியவற்றின் மூலமாக, மின்னல் வேகத்தில் எங்களது இலக்குகளை அடைந்து வருகிறோம்” என நேதன்யாகு பதிலளித்துள்ளார்.

ஐ.நா., அவசர ஆலோசனை..

வளைகுடா நாடுகள் மீது நிலவும் போர் பதற்றம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, வளைகுடா நாடுகளில் பொதுமக்கள் தொடர்பான உட்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என, பல்வேறு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்காமல் விலகிய நிலையில், 13-0 என்ற ஆதரவில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், “உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஈரான் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.