IPL 2026 CSK MI: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள், புள்ளிப்பட்டியலில் முறையே 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

தள்ளாடும் மும்பை, சென்னை..

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வரும். காரணம் 18 ஆண்டுகால வரலாற்றில் இந்த இரண்டு அணிகள் மட்டுமே, தலா 5 முறை என 10 ஆண்டுகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. சாம்பியன் பட்டத்தை வெல்லாவிட்டாலும், குறைந்தபட்சமாக பிளே-ஆஃப் சுற்றிற்காவது சென்னை மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுவிடும் என்பது உறுதியாக இருந்தது. அண்மைக்காலமாக அந்த நிலை மாறியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பதே சந்தேகமாக உள்ளது. அதற்கான மேலும் ஒரு உதாரணமாக தான் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில், நான்கு போட்டிகளின் முடிவில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் தத்தளிக்கின்றன.

புள்ளிப்பட்டியல் கடைசி இடம்..

13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்த தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதற்கடுத்த மூன்று போட்டிகளிலும் மும்பை அணி தோல்வி கண்டுள்ள புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஒரு மோசமான சீசனாக அமைந்த நிலையில், இந்த முறை சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது. ஒரு வழியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி கண்டு புள்ளிக்கணக்கை தொடங்கி 9வது இடத்தில் உள்ளது. மூன்று முறை சாம்பியன்களான கொல்கத்தா அணி 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் மட்டுமெ, ஒரு புள்ளியை பெற்றது. ஆனாலும், கடைசி இடத்தில் தான் உள்ளது.

மும்பை அணியின் ஸ்டார் சிக்கல்..

ஹர்திக் பாண்ட்யா கடந்த 2024ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக பொறுப்பேற்ற சீசனில், அணி மிக மோசமான சீசனை எதிர்கொண்டது. ஆனாலும், கடந்த முறை இரண்டாவது குவாலிஃபையர் வரை முன்னேறியதால் இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக பவுலிங் யூனிட் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. 4 போட்டிகளில் விளையாடிய பிறகும், நட்சட்திர வீரரான பும்ரா இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. போல்ட் சுத்தமாக ஃபார்மிலேயே இல்லாமல், ரன்களை வாரி வழங்கி வருகிறார். நமன் தீர் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. வழக்கமாக ஒவ்வொரு சீசனில் மும்பை அணி சில இளம் உள்ளூர் வீரர்களை அடையாளம் கண்டு, சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அணிக்காக விளையாடிய பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே மும்பை அணி முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. டி20 போட்டிகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அதற்கேற்ப தங்களை வடிவமைத்துக் கொண்ட இளம் திறமையாளர்கள் அடங்கிய சரியான ப்ளேயிங் லெவனை கட்டமைக்க மும்பை தவறியுள்ளது என்பதையே பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்கள் காட்டுகின்றன. டெத் ஓவர்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக்கூடிய வீரராஅக் ரூதர்ஃபோர்டை தவிர வேறு யாருமே அணியில் இல்லை.

இளசுகளால் சென்னைக்கு வந்த வினை..

மும்பை அணியில் இளம் வீரர்கள் இல்லாதது பிரச்னை என்றால், சென்னை அணியில் இளம் வீரர்கள் மட்டுமே இருப்பது பிரச்னையாக உள்ளது. திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களை வழிநடத்த அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் என்பது அவசியம். அவர்களால் மட்டுமே ஒவ்வொரு வீரரின் திறன்களையும் அறிந்து, அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கான பொறுப்பு என்ன? என்பதை எடுத்துரைக்க முடியும். ஆனால், அத்தகைய தலைமை பண்பு வாய்ந்த கேப்டன் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ருதுராஜின் கள செயல்பாடுகள், அவர் மீது கூடுதல் சுமை கட்டாயமாக சுமத்தப்பட்டுள்ளதோ என்ற எண்ணங்களை உருவாக்குகிறது. சுமார் 43 கோடி ரூபாயுடன் மினி ஏலத்திற்கு சென்றாலும், அணியை சமநிலைக்கு கொண்டு வரக்கூடிய சரியான வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்யவில்லை என்பதையே பெஞ்ச் வலிமை காட்டுகிறது. ஒருவேளை யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அவருக்கு நிகரான மற்றொரு வீரரை கூட பேக்-அப்பாக கொண்டிருக்கவில்லை.

வாரி வள்ளலான கொல்கத்தா..

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்தில் அதிகபட்ச தொகையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, கேமரூன் க்ரீன் (ரூ.25.20 கோடி), பதிரனா (ரூ.18 கோடி), முஸ்தஃபிசுர் ரஹ்மான் (ரூ.9.20 கோடி) ஆகியோரை கடுமையாக போட்டியிட்டு வாங்கியது. ஆனால், ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் இன்னும் பந்துவீச உடற்தகுதியை பெறவில்லை. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை காரணமாக வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பதிரானா காயம் காரணமாக முதல் 4 போட்டிகளில் விளையாடவே இல்லை. இதனால் அனுபவே இல்லாத, பலவீனமான பவுலிங் லைன் - அப்பை கொண்டு, வெற்றி பெற வாய்ப்புள்ள போட்டிகளை கூட கோட்டைவிட்டு வருகிறது. லக்னோ அணிக்கு எதிராக கையில் இருந்த வெற்றியை, முகுல் சவுத்ரி எனும் ஒற்றை வீரரிடம் கொல்கத்தா அணி தாரைவார்த்தது. வீரர்களின் காயம், அணி நிர்வாகத்திடம் சரியான திட்டமிடல் இல்லாதது, எதிர்பாராத சூழல்களுக்கான மாற்று திட்டங்களை வகுக்காதது ஆகியவை கொல்கத்தா அணியின் பின்னடைவாக கருதப்படுகிறது.

அப்க்ரேடாகாத ஆண்டைகள்..

காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால், எந்த ஒரு அணியாலும், வீரராலும் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதற்கு சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளின் இன்றைய நிலையே சிறந்த உதாரணமாகும். நட்சத்திர வீரர்களை நம்பி கோடிகளை கொட்டுவதாலோ, இளம் வீரர்கள் மட்டுமே போதும் என சரியான அனுபவம் வாய்ந்த வீரர்களை தவறவிட்டாலோ, சரியான திட்டமிடல் மற்றும் மாற்று வழிகள் இல்லாமல் களத்திற்கு வந்தாலோ, நிலைமை என்ன ஆகும் என்பதற்கு, மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அணிகளின் தற்போதைய நிலையே சிறந்த உதாரணமாகும்.

அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள், திறமையான இளம் வீரர்கள் ஆகியவற்றை சரியான கலவையில் கொண்டிருக்கும் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் தான், நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.