இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் நாளை தொடங்குகிறது. பாதியிலே நிறுத்தப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் ரத்தாகுமோ? என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் நின்றதுடன், ஐபிஎல் தொடரும் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆர்சிபி பேட்டிங் படை:

இதன்படி, பாதியிலே நிறுத்தப்பட்ட போட்டிகளில் இருந்து மீண்டும் ஐபிஎல் தொடங்குகிறது. இதன்படி, நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் கோலி, சால்ட், பெத்தேல், மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ஷெப்பர்ட், குருணல் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.

கொல்கத்தா பாய்ஸ்:

கொல்கத்தா அணியில் குர்பாஸ், ரகானே, ரகுவன்ஷி, மணீஷ்பாண்டே, ரஸல், ராமன்தீப்சிங், ரிங்குசிங், மொயின் அலி, வெங்கடேஷ் ஐயர் என பட்டாளமே உள்ளனர். இவர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினால் ரன்களை குவிக்கலாம். மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் ரன்களை குவிக்கவே இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

முடிவைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் பந்துவீச்சில் கலக்கும் அணிக்கே வெற்றி வசப்படும். பெங்களூர் அணியில் புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள், சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி முக்கிய பலமாக உள்ளனர். வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயின் அலி பக்கபலமாக உள்ளனர்.

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஆர்சிபி?

போட்டி நடக்கும் பெங்களூர் சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான மைதானம் ஆகும். இதனால், ரசிகர்களுக்கு ரன்மழை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த போட்டியை பொறுத்தவரை பெங்களூர் அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக செல்லும். ஏனென்றால், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி-யின் புள்ளிகள் 18 ஆக உயரும். இதன்மூலம் அவர்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம்.

அதேசமயம், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏறத்தாழ முடிந்துவிட்ட கொல்கத்தா அணி இந்த போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம் ஆகும். ஆனாலும், அது மிக மிக சவாலான ஒன்றாகவே உள்ளது.