IPL 2025 PBKS vs SRH: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது.

பட்டைய கிளப்பிய பிரப்சிம்ரன்:

பஞ்சாப் அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே பவுண்டரி, சிக்ஸர் விளாசினர் இவர்கள். ஓவருக்கு 15 ரன்கள் வீதம் அடித்தனர் இந்த ஜோடி. இதனால் 4வது ஓவரின் முடிவில் இந்த ஜோடி பிரிந்தது. ஆனால், 4 ஓவர்களிலே 66 ரன்களை இந்த ஜோடி குவித்தது. பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஸ்ரேயாஸ் சரவெடி:

அதன்பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். குறிப்பாக பிரப்சிம்ரன் பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் என யார் வீசினாலும் ரன்களை விளாசினார். அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் அரைசம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஈசன் மலிங்கா பந்தில் அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதன்பின்னர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியில் எங்கேயும் வேகத்தை குறைக்கவில்லை. ஈசன் மலிங்கா, ஜீசன் அன்சாரி, ஷமி, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் ஓவர்களில் விளாசினார். ரன்ரேட் எந்த வகையிலும் குறையாமல் பார்த்துக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக அரைசதம் விளாசினார். ஸ்ரேயாஸ் - நேகல் வதேரா ஜோடி 164 ரன்களில் பிரிந்தது. அவர் 22 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனால், அப்போதே பஞ்சாப் 13.3 ஓவர்களில் 164 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்பு வந்த ஷஷாங்க் சிங் 2 ரன்னில் அவுட்டானார்.

ஸ்டோய்னிஸ் சரவெடி:

கடைசி 6 ஓவரில் ரன் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது பஞ்சாப். குறிப்பாக, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளாகவும், சிக்ஸராகவும் விளாசினார். இதனால், 17வது ஓவரிலே பஞ்சாப் 200 ரன்களை எட்டியது. கடைசியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை தொடர்ச்சியாக ஸ்டோய்னிஸ் விளாசினார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 245 ரன்களை எடுத்தது. ஸ்டோய்னிஸ் 11 பந்துகளில் 4 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.