India Oil Reserve: அவசரகால பயன்பாட்டிற்கான கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், நாட்டின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் பற்றாக்குறை..

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கிய ராணுவ நடவடிக்கையால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், உலகின் 20 சதவிகித கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும், ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் விளைவாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு காரணமாக, உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தான், நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பான கேள்விக்கு, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் சேமிப்பு திறன்?

அமைச்சர் அளித்த பதிலின்படி, “நாட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய்யை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக சேமித்து வைக்க நிலத்தடி உட்கட்டமைப்பு வசதி உள்ளது. அங்கு 53 லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க முடியும். அதை கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டாலோ அல்லது விலைவாசி உச்சம் தொட்டாலோ 9.5 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது அங்கு மூன்றில் இரண்டு மடங்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. கச்சா எண்ணெய் இருப்பைக் கையாளும் ஐஎஸ்பிஆர்எல் நிறுவனத்திடம் தற்போது 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இது மொத்த கையிருப்பு திறனின் 64 சதவிகிதம் ஆகும்.

எங்கெங்கு சேமித்து வைக்கலாம்?

கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கூடுதல் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த, ஒடிசா மாநிலம் சன்டிகோல், கர்நாடக மாநிலம் படூரை மத்திய அரசு தேர்வு செய்தது. இதில் சன்டிகோலில் 40 லட்சம் டன் கச்சா எண்ணெய்யும், படூரில் 20 லட்சம் டன் கச்சா எண்ணெய்யையும் சேமிக்கலாம். அதாவது ஏற்கெனவே 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதி இருக்கும் நிலையில், புதிதாக ஏற்படுத்தப்படும் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதி மூலம் கூடுதலாக 60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சேமிக்கலாம். இதில் படூரில் கட்டுமானப் பணிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த சேமிப்பு திறன்

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான தற்போதைய மொத்த தேசியத் திறன் 74 நாட்கள் ஆகும். இதில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCs) சேமிப்புக் கிடங்குகளின் திறனும் அடங்கும். உண்மையான கையிருப்பு என்பது, கையிருப்பு மற்றும் உண்மையான நுகர்வு ஆகிய இரண்டையும் பொறுத்து மாறும். எனவே இந்த இரண்டையும் நிலையானதாக வரையறுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதி விவரங்கள்..

இந்தியா தற்போது பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 41 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் வழக்கமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் நாடுகளும், புதிய விநியோகஸ்தர்களான அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, கனடா, கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகியவையும் அடங்கும். உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக உள்ள இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 88 சதவிகிதத்திற்கு இறக்குமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் வழக்கமாக ஹார்மஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.