இந்திய திரையுலகின் இசை ஜாம்பவான் இளையராஜா. சுமார் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா இந்திய திரையுலகின் அடையாளமாகவே திகழ்கிறார். இவர் தான் திரையுலகில் மிகவும் பரபரப்பாக இயங்கிய காலகட்டத்திலே பல இளம் மற்றும் அறிமுக இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்காக ஊதியமே இல்லாமல் இசையமைத்து தந்துள்ளார். இதை பல தயாரிப்பாளர்களும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

நன்றி மறந்தவரா மணிரத்னம்?

இந்த நிலையில் தான் உதவி செய்த இயக்குனர் ஒருவர் பற்றியும், அவர் ஒரு முறை கூட அதை பொதுவெளியில் கூறாதது பற்றியும் இளையராஜா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இளையராஜா குறிப்பிட்ட அந்த இயக்குனர் மணிரத்னம்.

இளையராஜா அது குறித்து அந்த வீடியோவில் கூறியதாவது, மணிரத்னம் முதன்முதலில் வருகிறார். அவர் இந்த வார்த்தையை எங்கேயும் சொல்லவில்லை. அதுதான் விஷயம். சொல்லவில்லை என்பதை நான் குறையாக சொல்லவில்லை. மணிரத்னத்தை பாலுமகேந்திரா என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

நடந்தது என்ன?

மணிரத்னம் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்து நீங்க வாழ்ற காலத்துல நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை சார். நான் ஒரு கன்னட படம் பண்ணப்போறேன். என்னால நீங்க வாங்குற சம்பளம் கொடுக்க முடியாது என்றார். நான் அதைப்பத்தி ஒன்னும் பரவாயில்ல என்றேன். அவரு ஏதோ சம்பளம் சொன்னாரு. அதை ஒத்துகிட்டு வேலை பண்ணேன். அடுத்து சந்தர்ப்பமே வரல.

எனக்குத் தெரிஞ்ச தயாரிப்பாளர்கள், ஃபைனான்சியர்கள் எல்லாருக்குமே நான் பரிந்துரை செய்துள்ளேன். மணிரத்னம் நீ போயி அவரைப் பாரு. அவருக்காக நான் முயற்சி பண்ணேன். ஒரு மலையாள தயாரிப்பாளர் வந்தாரு. அவர்களாலயும் நான் வாங்கும் சம்பளம் தர முடியவில்லை.

இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

இளையராஜாவின் இசை:

இளையராஜா 1976ம் ஆண்டு இசையமைப்பாளராக தனது பயணத்தை அன்னக்கிளி படத்தில் தொடங்கிவிட்டார். மணிரத்னம் 1983ம் ஆண்டு பல்லவி அனு பல்லவி படம் மூலமாகவே இயக்குனராக அறிமுகமானார். மணிரத்னம் இயக்குனராக அறிமுகமானபோது இளையராஜா கோலிவுட்டின் மிகப்பெரிய இசையமைப்பாளராக உலா வந்து கொண்டிருந்தார்.

மணிரத்னத்தின் பல்லவி அனு பல்லவி படம் தொடங்கி அவர் இயக்கிய உணரோ( மலையாளம்), பகல் நிலவு, இதய கோயில், மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (தெலுங்கு), அஞ்சலி, தளபதி ஆகிய படங்கள் வரை இளையராஜா மட்டுமே இசையமைத்தார். அதன்பின்பு, ரோஜா படம் முதலே மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி வருகிறார்.

ரசிகர்கள் விமர்சனம்:

மணிரத்னத்தின் ஆரம்பகால திரைப்படங்களுக்கு அவரது இயக்கம், திரைக்கதை மட்டுமின்றி இளையராஜாவின் இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது என்றே கூற வேண்டும். மணிரத்னம் இளையராஜா செய்த உதவியை எந்த இடத்திலும் கூறவில்லை என்று இளையராஜா கூறியிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மணிரத்னத்தை விமர்சித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.