தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் இட்லி கடை. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். கதாநாயகனாக மட்டுமின்றி இயக்குனராகவும் அவர் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை.

இட்லி கடை வசூல்:

ஆயுதபூஜை கொண்டாட்டமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த படம் வெளியானது. மிகவும் மென்மையான கதைக்களம், தந்தை - மகன் பாசம், கிராமப்பின்னணி, குறுந்தொழில் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்தாலும், ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

26 கோடி ரூபாய் கலெக்ஷன்:

இந்த படத்திற்கு போட்டியாக காந்தாரா படம் வெளியாகியுள்ளதால் படத்தின் வசூலில் அது எதிரொலித்துள்ளது. இட்லி கடை படம் முதல் நாள் ரூபாய் 11 கோடியையும், இரண்டாவது நாள் ரூபாய் 9.75 கோடியையும் வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் 2 நாட்கள் மட்டும் ரூபாய் 20.75 கோடி வசூலை இட்லி கடை குவித்தது. 3வது நாளான நேற்று சுமார் ரூபாய் 5.50 கோடியை படம் குவித்துள்ளது. இதுவரை இட்லி கடை படம் கடந்த 3 நாட்களில் ரூபாய் 26.25 கோடி வசூலை குவித்துள்ளது.

இட்லி கடை படம் நேற்று தமிழ்நாட்டில் காலை காட்சியில் 16.76 சதவீதமும், மதியம் 38.67 சதவீதமும், மாலை காட்சியில் 40.32 சதவீதமும், இரவுக்காட்சியில் 48.09 சதவீதமும் இருக்கைகள் நிறைந்த காட்சிகளாக இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் சுமாராக வசூலை குவித்து வருகிறது.

இந்த படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், இளவரசு, பார்த்திபன், சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அடுத்த 2 நாட்கள் வசூல் குவிக்குமா?

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ரூபாய் 104 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியதாக படக்குழு தெரிவித்துள்ளது. தனுஷின் உண்டர்பார் படக்குழு மற்றும் டாவ்ன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை விநியோகித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார். கிரண் கெளசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் படம் வசூலை குவிக்கும் என்று படக்குழு நம்புகிறது. ஆனாலும், எதிர்பார்த்த வசூலை படம் குவிக்குமா? என்பதே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. காந்தாரா படம் ஒரு புறம் பாசிட்டிவ்வான விமர்சனங்களையும், வசூலையும் குவித்து வருவதால் இட்லி கடையின் வசூலில் அது எதிரொலித்துள்ளதாக கருதப்படுகிறது.