Hydrogen Powered Motocycle: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்ட, உலகின் முதல் இருசக்கர வாகனத்தை கவாஸகி நிறுவனம் பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பைக்:

ஹைட்ரஜன் சக்தியைப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளை தயாரிக்கும், முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதில் கவாஸாகி முன்னணியில் உள்ளது. ஜப்பானில் உள்ள சுஸுகா சர்க்யூட்டில், கவாஸகி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட உள் எரிப்பு இன்ஜின் (ICE) கொண்ட மோட்டார் சைக்கிளை முதல் முறையாக பொதுவெளியில் பரிசோதித்துள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் மோட்டார்சைக்கிளை 2030க்குள், உலக சந்தைக்கு கொண்டு வர கவாஸகி திட்டமிட்டுள்ளது. கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் மோட்டார் பைக்கில் ஹைட்ரஜன் சிஸ்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன் டேங்குகள் வடிவமைப்பு:

கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் மோட்டார் பைக், 998 சிசி கவாஸாகி இன்லைன்-ஃபோர் சூப்பர்சார்ஜ்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், சிலிண்டருக்குள் நேரடி ஹைட்ரஜன் எரிபொருள் உட்செலுத்தலை செயல்படுத்த, அதன் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. சேஸ்ஸில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக ஹைட்ரஜன் எரிபொருள் சிலிண்டர் புதிய வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாக தற்போது தனி ஹைட்ரஜன் எரிபொருள் மேலாண்மை அமைப்பு உள்ளது. மோட்டார் சைக்கிளின் ஹைட்ரஜன் டேங்குகள் பக்கவாட்டில் அமைந்துள்ளன. கூடுதலாக, ஹைட்ரஜன் டேங்குகள் வால்வுகள் வழியாக நிரப்பப்படுகின்றன. இயந்திரத்தின் இயக்கவியல் மற்றும் எரிப்பு செயல்முறை, பெட்ரோல் இன்ஜினை போன்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன் இன்ஜின்களின் செயல்திறன் எப்படி?

கவாசாகியின் கூற்றுப்படி, ஹைட்ரஜன் இன்ஜின்களின் செயல்திறன் வழக்கமான பெட்ரோல்-இயங்கும் இன்ஜின்களுடன் ஒப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் மூலம் நீராவி மட்டுமே வெளியிடப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில், ஹைட்ரஜன் ஒரு பரந்த வெப்பநிலை வரம்பில் மிகவும் திறம்பட செயல்படுகிறது. அதிக செயல்திறன் என்பது ஹைட்ரஜனை திறமையாக எரிப்பதன் விளைவாக கிடைக்கிறது. கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் பேஸ் மாடல் 137 என்எம் மற்றும் 210 குதிரைத்திறன் கொண்ட உச்ச முறுக்குவிசை கொண்டது. அதேநேரம், ஹைட்ரஜன் வாயு அடிப்படையில் இயங்கும்போது, அதன் உற்பத்தி திறன் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கவாஸகியில் இலக்கு என்ன?

ஹைட்ரஜன் பயன்பாடு அடிப்படையிலான பைக் என்பது, கார்பன் உமிழ்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கவாசாகியின் நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடாகும். ஹைட்ரஜனால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக கவாஸாகியால் நம்பப்படுகிறது. இதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஹைட்ரஜன் ஸ்மால் மொபிலிட்டி & என்ஜின் டெக்னாலஜி (HySE) கூட்டமைப்பில் கவாஸகி உறுப்பினராக உள்ளார். HySE ஒத்துழைப்பில் Yamaha, Suzuki மற்றும் Honda ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.