தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிட் 3 கேஸ் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. ஹிட் சீரிஸ் படங்களின் வரிசையில் வெளியான இப்படம் ரத்தக்காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. இப்படத்தை நானி தன்னுடைய புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்திருந்தார்.

மொத்த பணமும் முதலீடு

ஹிட் 3 படம் வெளியாவதற்கு முன்பு கோர்ட் என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படம் எதார்த்த வாழ்வியலையும் நிஜ கதையை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நானி கோர்ட் படத்தை பார்க்காதவர்கள் யாரும் ஹிட் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வர வேண்டாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கூறியது போலவே கோர்ட் படம் மிகப்பெரிய ஹிட் படமாகவும் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் 3 கேஸ் வெளியானது இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நானி நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஹிட் 3 படத்தில் முதலீடாக போட்டிருக்கிறேன். என்னிடம் செலவு செய்ய பணம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

கதை திருட்டு

படம் வெளியான முதல் நாளே பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் வசூலை ஈட்டியிருந்தாலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. காதல் ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த நானி தசரா படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் அவதாரம் நிறைந்த படங்களிலேயே நடித்து வருகிறார். அதுபோலவே ஹிட் 3 படத்தை நம்பி நடித்திருந்தார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. ஹிட் 3 படத்தின் கதை தமிழ் எழுத்தாளினியான விமலா வேலன் என்பவரது கதை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ரசிகைக்கு விபூதி அடித்த நானி

விமலா வேலன் தனது பெயரை மாத்தி சோனியா விமல் என்ற பெயரில் கதை எழுதுவதை பழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு எழுதிய ஏஜெண்ட் வி கதையை அப்பட்டமாக காப்பி அடித்துதான் ஹிட் 3 படத்தினை எடுத்திருப்பதாக நானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஏஜெண்ட் வி கதையும் ஹிட் 3 கதையும் ஒன்றாக இருப்பதை தென்னிந்திய எழுத்தாளர் சங்கமும் உறுதி செய்துள்ளது. கூடுதல் தகவலாக சோனியா எழுதிய ஏஜெண்ட் வி கதையை நானிக்கும் அனுப்பி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இதனால் கதைத் திருட்டு விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நானியா இப்படி செய்தது

தெலுங்கு ஹீரோவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக நானி இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போலவே இருந்துள்ளன. இவர் தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஒரு ரசிகையின் கதையை அப்படியே நானி திருடியிருப்பது தான் அதிர்ச்சியை தந்திருக்கிறது. இப்படி செய்யலாமா நானி என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.