தெலங்கானாவில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவம் அங்குள்ள ஜகித்யாலா கிராமப்புற மண்டலத்திற்கு உட்பட்ட பொரண்ட்லா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு தோபரபு சந்திரசேகர் மற்றும் நவிதா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிஷாந்த் என்ற 9 வயது மகன் இருந்தான். அச்சிறுவன் அருகிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஏப்ரல் 7ம் தேதி செவ்வாய்கிழமை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயிலில் உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நிஷாந்த், அவனுடைய தந்தை தோபரபு சந்திரசேகர் மற்றும் நவிதா ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு வருகை தந்திருந்த தனது உறவுக்கார குழந்தைகளுடன் நிஷாந்த் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் உணவு வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஓடி ஆடி விளையாடிய நிஷாந்த் திடீரென மயங்கி விழுந்தான்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக குழந்தைகள் அவனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிஷாந்தை எழுப்ப முயன்றனர். ஆனால் அச்சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்ததால் பயந்துபோன சந்திரசேகர் மற்றும் நவிதா சிகிச்சைக்காக ஜகித்யாலா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நிஷாந்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் நிஷாந்தின் பெற்றோர், உறவினர் மட்டுமல்லாமல் சுற்றியிருந்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மருத்துவமனை வளாகத்தில் சந்திரசேகர் மற்றும் நவிதா தம்பதியினர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து பொரண்ட்லா கிராமம் முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் உடல் நல பிரச்னைகள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகள் தொடங்கி இளம் பருவத்திலேயே மாரடைப்பு ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இதய நோய்கள் இன்று சிறுவர், சிறுமியரையும் பாதிக்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

அதேசமயம் குழந்தைகளுக்கு ஏற்படும் மாரடைப்புக்கு வாழ்க்கை முறை மாற்றங்களே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக துரித உணவுகளை உட்கொள்ளுதல், சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது,மனக்கவலை போன்ற விஷயங்களால் இளம் வயதிலேயே உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எனவே குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேசமயம் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை எடுப்பது சிறந்தது என அறிவுறுத்தியுள்ளனர்.