Govt Employees Salary: அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களை சேர்த்து நிதி மோசடி அரங்கேறியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மோசடி

மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும். இதுதொடர்பாக துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊதிய மோசடியாக இது கருதப்படுகிறது.

நடந்தது என்ன?

ஊதியம் கிடைக்கப்பெறாத ஊழியர்களுக்குஅவர்களுக்கான அடையாள எண்கள் இருந்தும், ஊதியம் வரவு வைக்கப்படாததால் இதில் ஏதேனும் பெரும் முறைகேடு நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் போலி ஊழியர்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. திடுக்கிடும் ஒழுங்கின்மை சம்பவத்தை விசாரிக்க வலியுறுத்தி, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடந்த மே மாதம் 23ம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விளக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

போலி ஊழியர்கள்:

ஊதியம் வழங்கப்படாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள் என்றும், மற்ற 10 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் கடந்த 6 மாத ஊதியம் 230 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படாவிட்டால் பணம் எங்கே போனது? என்ற கேள்வி வலுத்துள்ளது. போலி ஊழியர்களின் விவரங்கள், சம்பளதாரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு மோசடி அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

குவியும் கேள்விகள்:

அது உண்மையானால் அரசாங்கத்தை ஏமாற்றுவது யார்? சம்பளத்தொகையை நிலுவையில் வைத்து பின்பு காசோலை இன்றியே அந்த பணத்தை எடுக்க முடியுமா? அரசாங்கம் அறியாமலேயே 230 கோடி ரூபாய் மோசடிக்கு இடம் அளித்துள்ளதா? 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? ஆம் எனில், 9 சதவீத ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன? என யாராளமான கேள்விகள் எழுகின்றன.

சரிபார்ப்பு பணிகள் தீவிரம்:

வழக்கமான தரவு தணிக்கையின் போது மாநில கருவூலம் இந்த முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய நிதி ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியர்களின் தரவுகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் போலி ஊழியர்கள் அரசின் அமைப்பில் அமைதியாக பதுங்கியிருக்கிறார்களா என்பதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.