மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்க, துணை வேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டல் விடுத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் மோசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசியதாவது:

’’நாம் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் சராசரியைவிட அதிகமாக இருக்கிறோம். 6,500 பேருக்கு மேற்பட்ட நபர்கள் பி.எச்.டி படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் யுஜிசி நெட் என்ஆர்எஃப் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதேபோல AISER அறிக்கையின் படி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாகப் படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் மோசமாக உள்ளது.

துணை வேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டல்

நள்ளிரவு நேரத்தில் துணை வேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. மாநாட்டுக்குச் சென்றால், திரும்பி வர முடியாது என்று காவல் துறையினர் மிரட்டி உள்ளனர். இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு வரவில்லை. ஏராளமான பல்கலைக்கழகங்களை நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே, இந்த மாநாட்டை நடத்துகிறேன்’’.

இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்தார்.