2025-ம் வருடம் பிறந்ததிலிருந்தே தங்கம் விலை கூடிக்கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் தற்போது, சவரன் 60 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், குறிப்பாக கல்யாண வீட்டார் சற்றே கலக்கமடைந்துள்ளனர்.

17 நாட்களில் ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாடம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வருட தொடக்கத்தில், அதாவது 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,150 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.7,450 ஆக உள்ளது. இந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமிற்கு ரூ.300 விலை உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.

ரூ.60,000-த்தை நெருங்கிய தங்கம் விலை

ஜனவரி 1-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.57,200-ஆக இருந்தது. அதன்பின்னர், 3ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதன்பின், 4ம் தேதி ரூ.360 குறைந்து, 7ம் தேதி வரை அதே விலையில் நீடித்த தங்கம் விலை, 8ம் தேதி ரூ.80-ம், 9ம் தேதி ரூ.280-ம், 10-ம் தேதி ரூ.200-ம், 11-ம் தேதி ரூ.240-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,520 ரூபாயாக இருந்தது. 12 தேதி அதே விலையில் நீடித்த தங்கம் விலை, 13ம் தேதி சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில், 14ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. பின்னர் 15ம் தேதி மீண்டும் 80 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 16ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,120-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று(17.01.25) மீண்டும் ஒரு கிராமிற்கு ரூ.60 உயர்ந்து, கிராம் ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.59,600-க்கு விற்பனையாகிறது. இந்த தொடர் விலையேற்றம், மக்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்வு

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்தே காணப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி ரூ.98-ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.104-ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட 1 ரூபாய் உயர்ந்து, ரூ.104-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இந்நிலையில், தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை, 60,000 ரூபாயை நெருங்கியுள்ளதால். இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.